முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. வெளிநடப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுச்சேரி, ஆக.19 - கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டம் நேற்று காலை தொடங்கியது. காலை 11.30 மணிக்கு சட்டசபைக்கு வந்த கவர்னர் இக்பால்சிங் உரை நிகழ்த்தினார். 

கவர்னர் உரையை வாசிக்கத் தொடங்கியதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், புருசோத்தமன், பெரியசாமி, பாஸ்கர் ஆகியோர் எழுந்து கவர்னர் உரையை வாசிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ. பேசும்போது, பல்வேறு முறைகேடுகளுக்கு ஆளாகி உள்ள கவர்னர் இக்பால்சிங் அரசின் உரையை வாசிக்க தகுதி அற்றவர் என கூறி சபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்வதாக கூறினார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திரும்ப போ... திரும்ப போ.... படிக்காதே... படிக்காதே... வெளியேறு..... வெளியேறு... புதுவையை விட்டு வெளியேறு என்று கோஷமிட்டபடியே சபையை விட்டு வெளியேறினர். 

அப்போது அவர்கள் தங்கள் கைகளில் தமிழ் மற்றும் ஆங்கில வாசகம் கொண்ட பேனர்களை வைத்திருந்தனர். 

 

அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ. விளக்கம்

 

புதுவை சட்டசபையில் நேற்று கவர்னர் உரையை புறக்கணித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரு மாநிலத்தின் கவர்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆட்சி நடத்த வழிகாட்டுபவராக இருக்க வேண்டும். குறிப்பாக யூனியன் பிரதேசத்தில் கவர்னர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். ஒரு மாநில அரசுக்கே வழிகாட்டியாக இருக்க வேண்டிய கவர்னர் பல்வேறு குற்றச்சாட்டுளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதால் அரசின் தவறுகளை தட்டிக் கேட்க முடியாத நிலையில் உள்ளார். 

முதல்வர் ரங்கசாமி பதவி ஏற்று 3 மாதம் ஆகியும் காலத்தோடு செய்ய வேண்டிய அமைச்சரவை விரிவாக்கம், சபாநாயகரை தேர்ந்தெடுத்தது, அரசு தனக்குள்ள மெஜாரிட்டியை சட்டசபையில் நிரூபித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உத்தரவிட வேண்டிய கவர்னர் மவுனமாக இருப்பதால் இன்று வரை துணை சபாநாயகர், அமைச்சர் போன்ற பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது. 

கடந்த ஆட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் குறுக்கு வழியில் பணிக்கு வைக்கும் போதும், தற்போது முதல்வர் ரங்கசாமி ஆட்சிக்கு வந்தவுடன் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிய போதும் கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்காததால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்பட அரசு காரணமாக இருந்ததையும் கவர்னர் பொருட்படுத்தவில்லை. 

பாராளுமன்ற நெறிமுறைகளை மீறி செயல்படும் முதல்வரின் செயல்பாடுகளை தடுக்க கவர்னர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்ட நெறிமுறைகளை மீறி செயல்படும் ரங்கசாமி அரசின் தகுதியற்ற உரையை, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள கவர்னர் வாசிப்பதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்