முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகராட்சி - குடிநீர் வழங்கல் துறைக்கு நிதி ஒதுக்கீட்டுக்கு நன்றி

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.19 -  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு மானியத்தின் மூலம் தேவையான நிதி ஒதுக்கியதிற்கு சட்டசபையில் தே.மு.தி.க.உறுப்பினர் கு.நல்லதம்பி நன்றி தெரிவித்தார். தமிழக சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை மீது எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.நல்லதம்பி பேசியதாவது:

எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 61-வது வட்டத்தில் திடீர்நகர் என்ற குடிசைப் பகுதியில் சுமார் 750 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அடிப்படை வசதியின்றி சுகாதாரமற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பகுதியின் மேற்கிலுள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான காலிமனை உள்ளது. அதில் இந்த 750 குடும்பங்களுக்கும் எவ்வளவு தேவையோ அதனை சென்னை மாநகராட்சி மூலம் பெற்று இப்பகுதியின் ஏழை, எளிய மக்களுக்கு மாடி வீடுகள் கட்டித்தந்தால் ஏதுவாக இருக்கும்.

மேலும் இப்பகுதி திடீர்நகர் என்ற பெயரிலேயே கடந்த 40 வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. இந்த பெயரை மாற்றி அமைத்து மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயரிலேயே இப்பகுதியின் புதிய குடியிருப்புக்கு பெயர் வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எழும்பூர் தொகுதியில் குடிசைப் பகுதிகள் அதிகம் உள்ள தொகுதியாகும். இங்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அதிகம் வசிக்கின்றனர். ஆனால் இங்கு வசிக்கும் மக்கள், நம் வீடு நமக்கு சொந்தம் தானா? என்ற கேள்விக்குறியோடுதான் இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக இவர்கள் 40 வருடங்களாக வீட்டுமனைப் பட்டா கேட்டு பலமுறை முந்தைய அரசிடம் முறையிட்டும் பலனில்லை. ஆனால் தற்போது ஆட்சி பொறுப்பேற்று இருக்கும் புதிய அரசு நமக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் என்று நம்பிக்கையுடன் என்னிடம் மனு கொடுத்து சென்றிருக்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா கருணை உள்ளம் கொண்டு வீட்டுமனைப்பட்டா வழங்கி தொகுதி மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட தங்களை மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எழும்பூர் தொகுதிக்குட்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்தும், உடைந்தும், இடிந்துவிழும் நிலையில்தான் உள்ளது. இந்த குடியிருப்புகளில் பழுதடைந்த இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மறுசீரமைத்திட நடவடிக்கை எடுக்குமாறும், அதேபோல் காவலர் குடியிப்புகளையும் அரசு கவனத்தில் வைத்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு முடிப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா தாராளமாய் நிதியுதவி வழங்கிட வேண்டும்.

எழும்பூர் தொகுதி முழுவதும் மழைக்காலங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி அது வடிவதற்கே கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகிவிடும். இதனால் எழும்பூர் பகுதி மக்கள் மழைக்காலங்களில் மிகவும் அவதிக்கு உள்ளாகிறார்கள். பல நாட்கள் தண்ணீர் தேங்கி விடுவதால் அப்பகுதி மக்களுக்கு காலரா, வாந்தி, மயக்கம் போன்ற தொற்றுநோய்கள் தாக்கக்கூடிய அபாயம் ஏற்படுகிறது. ஆகவே, குறிப்பாக பிரிக்ளின் சாலையில் உள்ள 1400 மீட்டர் நீளம் கொண்ட ஆங்கிலேயேர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான மழைநீர் கால்வாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் பழுதடைந்து கிடைக்கிறது. அதனை உடைத்து தூர்வாரி செப்பனிட அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் இன்னும் பணி ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கிறது. எனவே இப்பணியை துரிதப்படுத்தி முடிப்பதற்கும், மேலும் சூளை காளத்தியப்பா தெரு மற்றும் ஏ.பி. ரோடு ஆகிய பகுதிகளில் பள்ளிகள் அதிகம் உள்ளதால் மழைக்காலங்களில் மாணவ, மாணவிகள் பள்ளி செல்ல முடியாமல் தொடர்ந்து 10 நாட்களுக்கு விடுமுறை எடுக்கும் சூழல் ஏற்படுகிறது. 

அதேபோன்று எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 72-வது வட்டம் பச்சையப்பன் கல்லூரியின் இடதுபுறம் உள்ள அப்பாராவ் கார்டன், அவ்வைபுரம், வெங்கடாசலபதி ஒன்றுமுதல் மூன்றாவது தெருவரை, சுப்பாராமன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கந்தன் தெரு, மற்றும் ஜோதியம்மா நகர் ஆகிய இடங்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அப்பகுதி மக்கள் குடிநீர் வரி, வீட்டுவரி மற்றும் கழிவுநீர் வரி ஆகிய வரிகளை முறையாக செலுத்தியும் குடிநீர் குழாய் இணைப்பு இருந்தும், சீராக தண்ணீர் வராமல் வறட்சிக்காலங்களில் வழங்குவதுபோல் டேங்கர் லாரிகள் மூலமாக வரவழைக்கப்பட்டு சுமார் 51 தண்ணீர் தொட்டிகள் வழியாகத்தான் இன்றைக்கும் சுமார் 15 ஆண்டுக்காலமாக குடிநீரை உபயோகித்து வருகிறார்கள்.

 தமிழகத்தின் தலைநகராமான சென்னையை சிங்கார சென்னை என்று வாயார அழைக்கப்படும், அதுவும் சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்திற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில்தான் இப்பகுதி உள்ளது என்பதை தங்களுக்கு கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

மேலும் அப்பகுதி மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் குழாய்கள் மூலமாக தொடர்ந்து சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைத்திட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் மானியத்தின் மூலம் இதனை சரி செய்திட முதல்வர் ஜெயலலிதாவை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எழும்பூர் தொகுதி குடிசைகள் நிறைந்த தொகுதியாகும். இங்கு வாழும் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி சிரமத்துடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, எனது தொகுதி முழுவதும் உள்ள குடிசைகளை அகற்றி அவர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான குடியிருப்புகளை (கல்நாரை வீடுகள்) அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன.

மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு மானியத்தின் மூலம் தேவையான நிதி ஒதுக்கியதற்கு முதல்வருக்கு மீண்டும் ஒருமுறை எழும்பூர் சட்டமன்ற தொகுதியின் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கு.நல்லதம்பி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony