முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிராக இடது கம்யூ.,அ.தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகள் 23-ம் தேதி நாடுதழுவிய போராட்டம்

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 20 - ஊழலுக்கு எதிராக வலுவான சட்டம் ஒன்றை கொண்டுவர வலியுறுத்தி வருகிற 23 ம் தேதி நாடு தழுவிய கண்டன போராட்டங்களை நடத்த இடது கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., வலது கம்யூனிஸ்ட்டு, தெலுங்குதேசம் உள்ளிட்ட 9 கட்சிகள் முடிவு செய்துள்ளன. டெல்லியில் இடது கம்யூனிஸ்ட்டு பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமையில் 9 எதிர்க்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வலது கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், அ.தி.மு.க. எம்.பி. மு.தம்பிதுரை, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடு, மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி.தேவேகவுடா, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியின் தலைவர் அஜீத்சிங், பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த தேப ரத்தா பிஸ்வாஸ், ஆர்.எஸ்.பி. கட்சியைச் சேர்ந்த அபாலிராய், பிஜு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த பிரத்துஹார் மஹ்தாப் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. ஊழலுக்கு எதிராக போராடும் ஜனநாயகவாதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதைக் கண்டிக்கும் வகையிலும், ஊழலுக்கு எதிரான வலுவான சட்டம் ஒன்றைக் கொண்டுவர வலியுறுத்தியும் வருகிற 23 ம் தேதி நாடு தழுவிய அளவில் ஆர்பாட்டங்கள், தர்ணாக்கள் என்று பல கண்டன போராட்டங்களை நடத்த 9 கட்சிகளும் தீர்மானித்துள்ளன என்றார்.
ஏ.பி.பரதன் கூறுகையில், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவைக்கூட வாபஸ் பெறவேண்டும் என்று கோரியும் இந்த ஆர்பாட்டம் நடத்தப்படும் என்றார்.
ஊழலுக்கு எதிரான மசோதாவை ஆய்வு செய்யும் பாராளுமன்ற நிலைக்குழுவிடம் இந்த 9 கட்சிகளும் தங்களது நிலையை எடுத்துக்கூறும் என்று பிரகாஷ் காரத் கூறினார். இந்த கூட்டம் 3 வது அணி அமைப்பதற்கான முன்னோட்டமா? என்று கேட்டதற்கு, இது பிரச்சனை அடிப்படையிலான கூட்டம் என்று பிரகாஷ் காரத் கூறினார்.  ஏற்கனவே நாங்கள் விலைவாசி உயர்வை முன்வைத்து அகில இந்திய அளவில் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். அதுபோலத்தான் இதுவும் என்றும் பிரகாஷ் காரத் கூறினார். ஊழலுக்கு எதிராக பாரத் பந்த் நடத்தப்படுமா என்று கேட்டதற்கு, ஊழலுக்கு எதிராக நாடுதழுவிய அளவில் நடத்தப்படும் இந்த போராட்டம் ஒரு துவக்கமாகும். நாங்கள் மீண்டும் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு பிறகு வருங்கால நடவடிக்கை குறித்து கூடி விவாதிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் என்னென்ன விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று கேட்டதற்கு, நாடு முழுவதும் புரையோடிப்போயுள்ள ஊழல், ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்தும் போராட்டம் ஆகியன பற்றித்தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டது என்று காரத் கூறினார். மத்திய அரசு இப்போது தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா ஏற்புடையது  அல்ல என்று காரத் மேலும் கூறினார். பாராளுமன்றத்தில் இப்போது தாக்கல் செய்துள்ள மசோதா பலவீனமான, தீவிரத்தன்மை இல்லாத மசோதா என்றும் எனவே தீவிரமான, வலுவான மசோதாவையே தாங்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்