முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்ணைத் தொடும் தங்கம் விலை பவுன் ரூ. 21 ஆயிரத்தை தாண்டியது

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஆக.- 20 - தங்கம் விலை பவுனுக்கு ரூ. 21 ஆயிரத்தை தாண்டியது. இதனால் தாய்மார்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.  கடந்த 2009 ம் ஆண்டு ஒரு பவுன் தங்கம் ரூ. 10 ஆயிரத்தை கடந்தது குறித்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் இருந்து தங்கம் விலை ராக்கெட்டை மிஞ்சும் வேகத்தில் இடைவிடாது அதிரடியாக உயர்ந்து வருகிறது. 2010 ம் ஆண்டில் ஒரு பவுன் ரூ. 12,784 வரை விற்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் பவுன் ரூ. 16 ஆயிரத்தை கடந்தது.  தொடர்ந்து அசுர வேகத்தில் ஏறிய தங்கம் நேற்று முன்தினம் பவுன் ரூ. 20 ஆயிரத்து 32 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2 ஆயிரத்து 504 க்கு விற்கப்பட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வு என வர்ணிக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களும், பெண் குழந்தைகளை பெற்றவர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். தங்கம் எட்டாக்கனியாகி விட்டதே என்று ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தனர்.
இதற்கிடையே நேற்று தங்கம் விலை மேலும் உயர்ந்து ரூ. 21 ஆயிரத்தை தாண்டியது. பங்கு சந்தையில் வீழ்ச்சி, அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இனி சுப முகூர்த்த நாட்கள் தொடங்கி விட்டதால் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 62 ஆயிரத்து 625 ஆக உள்ளது. மதுரையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 2 ஆயிரத்து 697 ஆக இருந்தது. ஒரு பவுன் விலை ரூ. 21,576 ஆக இருந்தது. இதே போல் ஒரு கிராம் வெள்ளி ரூ. 67 ஆக இருந்தது. தங்கத்தின் இந்த விலை உயர்வால் ஏழை, எளிய தாய்மார்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர். மேலும் தங்களின் பெண் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் வைத்தாலே போதும் என்ற நிலைக்கு அவர்கள் வந்து விட்டனர்.
இதனை அறிந்துதான் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஏழை, எளிய தாய்மார்களின் கவலையை தீர்க்கின்ற வகையில் ஏழை பெண்களின் திருமணத்திற்காக 4 கிராம் இலவச தங்கம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். தங்கத்தின் இந்த விலை உயர்வினால் தங்கம் வாங்குவதையே மக்கள் புறக்கணித்தால்தான் தங்கத்தின் பயன்பாடு குறையும். ஒரு விடிவு காலமும் பிறக்கும்.  இந்த நிலை ஏற்பட்டால்தான் தங்கத்தின் விலையும் குறையக்கூடுமோ என்னவோ? ஆண்டவனுக்கே வெளிச்சம்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony