முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் கன்னிப்பேச்சு

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 20 - ஏ.எம் - பி.எம் பாராமல் உழைக்கும் எங்கள் சி.எம் நீங்கள் என்று சட்டசபையில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் பேசினார். சட்டபேரவையில் நேற்று உணவு கூட்டுறவு துறை மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாத்ததில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.அசோக் பேசியதாவது:- தமிழகத்திற்கு வாழ்வளிக்கும் அவர்களது கனவை, அவர்களது ஆசையை, அவர்களது இலட்சியத்தை பிரதிபலிக்கும் இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஒரு விடியல். தாயே நாள்தோறும் ஏ.எம், பி.எம் பார்க்காமல் உழைக்கும் எங்கள் சிஎம். நீங்கள்தான். கட்சித்தொண்டனின் உழைப்பின் உண்மையறிந்து, அவனை கரம் தூக்கி, அரியணையில் உட்காரவைத்து, அழகு பார்ப்பது தங்களால் மட்டும்தான் முடியும்.

ஆம் ஏழை விவசாயி மகனாய், முகவை மண்ணில், கரிசல் காட்டில் பிறந்த என்னை முதலில் தங்கள் திருநாமத்தை தாங்கிய பேரவை மன்றத்தில் செயலாளராக விதையை விதைத்தீர்கள்.

2006 மாநகராட்சி தேர்தலின்போது என் மனைவிக்கு 153-வது வார்டில் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பளித்தபோது, என் மீது பொய் வழக்குபோட்டு, சிறைச்சாலையில் அடைத்து கொடுமைகள் செய்த வேளச்சேரியில் குடியிருந்த மு.க.ஸ்டாலின். கழகத்தின் சீரிய எழிச்சியால்  தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தென் சென்னை மாவட்டம், வேளச்சேரி தொகுதியை விட்டு அஞ்சி, நடுங்கி ஓடிப்போனார்.

உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதையும், இந்தியாவிற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கும் மதுகெலும்பாக இருக்கின்ற விவசாயத்திற்கு முதல் கட்டப் பணிகளுக்காக 60 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது வேளாண் விவசாயிகளின் வயலில் நீர் பாய்ச்சியது போல, வயிற்றில் பால் வார்த்தது போல, இதனால் சென்ற ஆண்டு வேளாண் உற்பத்தியான 85.35 லட்சம் மெட்ரிக் டன் என்பதைவிட இந்த ஆண்டு 115 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு தேசத்தின் முதுகெலும்பு கிராமத்திலுள்ளது என்று கனவு கண்டார் மகாத்மா காந்தி. அந்த காந்தியின் கனவை நினைவாக்கி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை உச்ச வேளாண் பருவத்தின் போது விவசாய வேலைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  திட்டத்தை தீட்டியுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் ஆற்றலுக்கு மற்றுமொறு மனிமகுடமாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பாதகமாக வெளியே எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலை போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா அது முற்றிலும் புதிது உலகிலேயே அரிது. 

நாம் நடைமுறைப்படுத்துவதை பார்த்து பிளாஸ்டிக் கழிவுகளை நமது நாடுகளுக்கு அனுப்பும் அமெரிக்கா. ஜெர்மனி போன்ற நாடுகளும் அதை நடைமுறைப்படுத்த முன்வரலாம். முன்வர வேண்டும். அதேபோல திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை. எவரும் யோசித்திராத அறிவியல் திட்டம் இது. அதை நடைமுறைப்படுத்த ஹெலிகாப்டரில் இந்த சென்னை மாநகர் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா ஒரு சுற்று பார்வையிட்டு வந்திருக்கிறார். 

சென்னை மாநகர் சீரும் சிறப்பும் பெற நடவடிக்கை ஆரம்பித்துவிட்டார். முற்றிலும் புதிய ஓர் அணுகுமுறையை மேற்கொண்டு தமிழகத்தில் தொழிற்பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சோதனைகளையும் வேதனைகளையும் சாதனைகளாக்கி வெற்றிப் பெறுறவது ஜெயலலிதாக்கே உள்ள தனித்தகுதி. முதல்வர்ஜெயலலிதா எடுத்த காரியம் யாவினும் வெற்றிதான்.

மற்ற மாநிலங்களும் கடைப்பிடிக்கும் அளவுக்கு அத்திட்டம் இருக்கும். ஏனெனில் ஜெயலலிதா மக்களின் நாடித் துடிப்பை அறிந்த டாக்டர். பிறரைப்போல பல்கலைக்கழங்களை சும்மா நச்சரித்து டாக்டர் பட்டம் பெற்றவர் அல்ல. அவர் ஆக்கப்பூர்வமாக யோசிப்பவர். நடைமுறை எதார்த்தத்தை பார்கிறவர்கள். ஆகவே தான் மாணவ மாணவியருக்கு 4 செட் யூனிபார்ம் மற்றும் காலணிகள் என்று அறிவித்திருக்கிறார்.இந்த பட்ஜெட்டில் 50-க்கும் மேற்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து அதற்கான நிதியையும் ஒதுக்கி இந்த நலத்திட்டங்களும் சலுகைகளும் சேர வேண்டியவர்களுக்கு சேருகிறதா என்று கண்காணித்து செயல்படுத்துவதற்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை என்று ஒரு துறையை ஏற்படுத்தி திட்டத்தை செயல்படுத்தினால் மட்டும் போதாது அது சம்மந்தமான ஆலோசனையையும் கருத்துக்களையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டுமென்று அறிவுறுத்தி இருப்பது முதல்வர் ஜெயலலிதாவின்  சிந்தனைக்கும், செயலுக்கும், ஆற்றலுக்கும், ஓர் எடுத்துக்காட்டாடு.

முதல்வரிடம் சில விண்ணப்பங்கள்:

வேளச்சேரி ஏரியை தூய்மைப்படுத்தி, படகு குழாயாக மாற்றி சுற்றுலா தலமாக அமைக்க வேண்டுகிறேன், போக்குவரத்து நெரிசலை போக்க திருவான்மியூர் எல்.பி.ரோடு சிக்னல் மற்றும் வேளச்சேரி - விஜயநகரம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைத்து தருமாறு வேண்டுகிறேன், வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட அடையாறு, திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி பகுதி குடிசை வாழ் மக்களுக்கு குடிசை மாற்று  வாரியத்தின் வாயிலாக பல ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டு கிரய பத்திரம் வழங்கப்பட்டாமல் உள்ளது. கிரய பத்திரம் உடனே கிடைக்க ஆவண செய்யுமாறு தங்கள் பொற்பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.

வேளச்சேரி தொகுதியில் இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட திருக்கோவில்களுக்கு சொந்தமான தற்போது பயன்பாட்டில் இல்லாத காலி நிலங்களில் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் ஏற்படுத்தி திருக்கோவிலின் வருவாயை பெருக்கிட வழிவகை செய்ய வேண்டுமாய்  வேண்டுகிறேன்.

இஸ்லாமிய சகோதரர்களின் நெடுநாள் கோரிக்கையான அடக்கஸ்தலத்திற்கு வெயிலும், மழையிலும் சுமார் 15 கி.மீ தொலைவு செல்ல வேண்டியுள்ளது. இதனால் வாகன செலவு சுமார் ரூ.5 ஆயிரத்தை தொடுகிறது. ஏழை, எளிய இஸ்லாமிய சகோதரர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகிறார்கள். ஆகையால் வேளச்சேரி தொகுதியிலேயே அவர்களுக்கு அடக்கஸ்தலம் அமைத்து தருமாறு வேண்டுகிறேன்.

தென் சென்னை மாவட்டத்திற்கென ஒரு அரசு பொது மருத்துவமனையை உருவாக்கி அதை வேளச்சேரி தொகுதியில் அமைக்க வேண்டுகிறேன். 2006 மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.வினர் மீது போடப்பட்ட வழக்கில் இதுவரை எந்த நடடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. நடவடிக்கை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். வேளச்சேரி இரயில் நிலையம் அருகில் பேருந்து நிலையத்துடன் அடுக்ககாக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

வேளச்சேரி புவனேஸ்வரி நகர் பகுதியில் வசிப்பவர்கள் கடந்த ஆட்சியில் போலி பத்திரப்பதிவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, தனது சொந்த நிலங்களுக்கு பட்டா வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். இதனால் இந்த பகுதிய மறு நில அளவை செய்து உரியவர்களுக்கு நிலம் கிடைக்க தக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony