முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் லோக்பால் மசோதா விவகாரம் மத்திய அரசுடன் பேச்சுக்கு தயார் அண்ணா ஹசாரே அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,ஆக.- 22 - மக்கள் லோக்பால் மசோதா தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று காந்தீயவாதி அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.  ஊழலை ஒழிக்க வலுவான மக்கள் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் வருகின்ற 30-ம் தேதிக்குள் நிறைவேற்றக்கோரி பிரபல சமூக சேவகரும் காந்தீயவாதியுமான அண்ணா ஹசாரே மீண்டும் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வலுவான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார். அதேசமயத்தில் இந்த பிரச்சினையில் நீக்கப்போக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், அனைத்து தரப்பினர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவும் தயார் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார்.  இந்தநிலையில் நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரே,தன்னுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் லோக்பால் மசோதா குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறினார். பேச்சுவார்த்தைக்கு தயார் என்று மத்திய அரசும் அறிவித்திருந்தாலும் இது தொடர்பாக எங்களுடன் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் எங்கே, எப்போது பேச்சுவார்த்தை நடத்துவது, இதில் யார் யார் கலந்துகொள்வது தொடர்பாக மத்திய அரசு சார்பாக யாரும் எங்களுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறினார். மக்கள் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தரக்கோரி எம்.பி.க்கள் வீடுகள் முன்பு மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ஹசாரே கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில் அண்ணாஹசாரே உடல்நிலையில் மத்திய அரசு அக்கறை கொள்வதாக தெரியவில்லை என்று ஹசாரேயின் ஆதரவாளர்களில் ஒருவரான கிரண்பேடி கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார். மக்கள் லோக்பால் மசோதாவுக்கு தீர்வுகாணுவதில் மத்திய காலம் தாழ்த்தி வருகிறது. உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் சுகாதார வசதி எதுவும் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என்றும் கிரண்பேடி கூறினார். அண்ணா ஹசாரேயின் இந்த உண்ணாவிரத போராட்டத்தால் நாட்டு மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் கிரண்பேடி தெரிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்தில் மழைவெள்ளம் தேங்கி கிடப்பதாகவும் சுத்தம் செய்யப்படாததால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன என்றும் கிரண்பேடி கூறினார். அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரையில் தொடர்ந்து நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் நடைபெற்றன. இதில் இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள், பெண்கள்,முதியோர்கள், சுதந்திரப்போராட்ட தியாகிகள் ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்