முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலுவான லோக்பால் மசோதா கோரி அன்னா ஹசாரே 6-வது நாளாக உண்ணாவிரதம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 22 - ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வரக்கோரி டெல்லியில் அன்னா ஹசாரே நேற்று 6-வது நாளாக தனது  உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்போரையும் சேர்க்க வேண்டும் என்று பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் முரணாக செயல்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசு தயாரித்த லோக்பால் மசோதாவும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இந்த மசோதா வரம்பிற்குள் பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆகியோர் உட்படுத்தப்படவில்லை. எனவே வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி கடந்த 16-ம் தேதி டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ள அன்னா ஹசாரே திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்த உண்ணாவிரதத்திற்கு 22 நிபந்தனைகளை டெல்லி போலீசார் விதித்து இருந்தனர்.
இந்த 22 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகளை ஹசாரே ஏற்க மறுத்ததை அடுத்து  அவரது உண்ணாவிரதத்திற்கு அளிக்கப்பட்ட  அனுமதியை போலீசார் ரத்து செய்தனர்.
மேலும் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற ஹசாரேவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால் நாடு முழுவதும் ஹசாரேவுக்கு ஆதரவு பெருகியதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
தனது உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளித்தால்தான் சிறையில் இருந்து வெளியே வரப்போவதாக ஹசாரே நிபந்தனை விதித்தார்.
இதை அடுத்து  டெல்லி ராம்லீலா மைதானத்தில் 15 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளித்தனர்.
இதை அடுத்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஹசாரே கடந்த 19-ம் தேதி  டெல்லி ராம் லீலா மைதானத்தில் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். கடந்த 16 ம் தேதி முதற்கொண்டே அவர் சிறையிலும் உண்ணாவிரதம் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி அவர் நேற்று 6-வது நாளாக தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
தாங்கள் கொண்டுவந்துள்ள ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு ஏற்கும் வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் அதுவரை தான் இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்றும் ஹசாரே உறுதிபட கூறியுள்ளார்.
ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும் ராம் லீலா மைதானத்தை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய  மருத்துவ குழுவினரும் உண்ணாவிரதப் பந்தலுக்கு அருகே முகாமிட்டுள்ளனர்.
இந்த லோக்பால் மசோதா வெற்றி பெற்றதற்கு பிறகு தேர்தல் சீர்திருத்தம் மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பாக மேலும் பல போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் ஹசாரே கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்