முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தபால் நிலையங்களில் வங்கி,இன்சூரன்ஸ் பணிகள் தொடங்கப்படும்: மத்திய மந்திரி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,ஆக.- 22 - நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 55 ஆயிரம் தபால் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பணிகள் தொடங்கப்படும். இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி கோரப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் தபால் நிலையங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. அதேசமயத்தில் தபால் நிலையங்களை மூடமுடியாது. அப்படி மூடினால் வேலை இழப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் பணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் அவைகளில் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக லைசென்ஸ் வழங்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் கோரியிருப்பதாக மத்திய செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் சச்சின் பைலட் நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். தபால் நிலையங்களில் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பணிகளை தொடங்குவதால் கிராமப்புறங்களுக்கு வசதியாக இருக்கும். வங்கிகளுக்கு செல்ல வேண்டுமென்றால் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. நகரமக்களுக்கு இருக்கும் வங்கி வசதி கிராமப்புற மக்களுக்கு இல்லை என்று அமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்தார். நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் கம்ப்யூட்டர்மையமாக்கப்படும். இணையதள இணைப்பும் செய்து கொடுக்கப்படும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிஎஸ்என்எல் சர்வீஸ் நல்ல முறையில் இருக்கிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்து 67 ஆயிரம் செல்போன் சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனர். இந்த நடப்பு நிதியாண்டில் மேலும் 1.5 லட்சம் செல்போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் பைலட் மேலும் கூறினார். பாகிஸ்தானையொட்டி எல்லை கட்டுப்பாடு கோடு நெடுகிலும் தொலைபேசி வசதி குறைவாக இருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த சச்சின், அந்த பகுதியில் நிலச்சரிவு அதிகமாக இருப்பதால் தொலைபேசி மற்றும் செல்போன் டவர்களை அமைக்க முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்