முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சன் குழுமம் மீது கேபிள் டி.வி. ஆபரேட்டர் புகார்

செவ்வாய்க்கிழமை, 23 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

தர்மபுரி, ஆக.23 - சேனல் ஒளிபரப்பு செய்ய பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கான உபகரணங்கள் வழங்காமல் மோசடி செய்த சன் குழுமத்தின் மீது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கேபிள் ஆபரேட்டர் புகார் கொடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் கேபிள் ஆபரேட்டர் தொழிலில் சே.பாஸ்கர் அவரது சகோதரர் சண்முகம் ஆகிய இருவரும் ஈடுபட்டு முறையான அனுமதி பெற்று ஜீரோ பாயிண்ட் என்ற பெயரில் கேபிள் இணைப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக சன் டி.வி. குழுமத்தின் சேனல்களை விலைகொடுத்த  பெற்று ஒளிபரப்பி வருகின்றனர். இந்நிலையில் இவர் சன் டி.வி. குழுமத்திற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக சன் டி.வி., கே.டி.வி., சன் நியூஸ், சன் மியூசிக் ஆகிய நான்கு சானல்களுக்கு உண்டான கட்டணத்தொகையை டி.டி. மூலம் அனுப்பியிருந்தும் சன் குழுமத்தினர் சன் டி.வி., கே.டி.வி. ஆகிய இரண்டு சேனல்களை மட்டும் பயன்படுத்த உரிய உபகரணங்களை அனுப்பியுள்ளனர். மீதமுள்ள இரண்டு சேனல்களுக்கான உபகரணங்களை அனுப்பாமல் மோசடி செய்துள்ளதாக கேபிள் டி.வி. ஆப்பரேட்டர் பாஸ்கர் மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் தர்மபுரியில் உள்ள மாவட்ட  குற்றப் புலனாய்வுத்துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். இதனால் தனது வாடிக்கையாளர்களுக்கு விருப்பச் சேனல் வழங்க முடியாமல் வாடிக்கையாளர்களை இழந்து தொழிலில் ரூ. 30 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தங்களை ஏமாற்றி மோசடி செய்த சன் குழுமத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். 

கேபிள் ஆப்பரேட்டர்கள் சன் குழுமத்தின் மீது தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்