முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரே விவகாரம்: பார்லி.யில் கூச்சல் - குழப்பம்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.24 - அன்னா ஹசாரே உண்ணாவிரத பிரச்சினையால் பாராளுமன்ற இருசபைகளிலும் ஏற்பட்ட கூச்சல்-குழப்பத்தால் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற லோக்சபை நேற்று கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் எழுந்து ஊழல் மற்றும் கறுப்புபணத்திற்கு எதிராக அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்து வருவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினர். இதற்கு பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். சுஷ்மா சுவராஜ் கோரிக்கைக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சபையை நடத்த முடியாததால் அப்போது சபையில் இருந்த சபாநாயகர் மீரா குமார், சபையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்தார். சபை மீண்டும் கூடியதும் அதே பிரச்சினையை சுஷ்மாசுவராஜ் எழுப்பினார். அதனால் சபையில் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் சபையை நடத்த முடியாததால் பிற்பகல் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு சபை கூடியதும் இந்த கூச்சல் குழப்பம் நீடித்ததால் சபையை நாள் முழுவதும் சுஷ்மா சுவராஜ் ஒத்திவைத்தார். 

இதே பிரச்சினையை ராஜ்யசபையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். சபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு ஊழல் மற்றும் கறுப்புபணத்திற்கு எதிராக அன்னா ஹசாரேபோராட்டம் நடத்தி வருவது குறித்து விவாதிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா, பகுஜன்சமாஜ், அ.தி.மு.க. போன்ற கட்சி உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு சென்று கோரினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் பகல் 12 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு சபை மீண்டும் கூடியதும் அதே பிரச்சினையை இந்த கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது சபையில் இருந்த பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா, கேள்வி நேரத்திற்கு பின்னர் இது குறித்து விவாதிக்கலாம் என்றார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சம்மதிக்காததோடு உடனடியாக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். இதனால் கூச்சல் குழப்பம் ஓயவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று நாள் முழுவதும் சபையை தலைவர் ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்