முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ்குழு நிர்வாக செலவு நிதி ரூ.20 லட்சமாக உயர்வு

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.24 - தமிழக சட்டபேரவையில் நேற்று (ஆக.23) நடைபெற்ற பிற்பட்டோர் மிகப்பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்து அமைச்சர் அ.முஹம்மத்ஜான் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கு 2011-12 ஆம் ஆண்டில் 25 கல்லூரி விடுதிகளும், இஸ்லாமிய சிறுபான்மையின மாணவியருக்கு 3 பள்ளி விடுதிகளும் ஆக மொத்தம் 28 விடுதிகள் ரூ.4.28 கோடி செலவில் புதியதாக திறக்கப்படும். 

2005-06 ஆம் ஆண்டிற்கு முன் துவக்கப்பட்ட 500 பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு பழுதடைந்துள்ள சமையல் பாத்திரங்களுக்குப் பதிலாக ரூ.50 லட்சம் செலவில் புதிய பாத்திரங்கள் வழங்கப்படும். 50 பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளுக்கு புதிய அரவை இயந்திரங்கள் ரூ.6.25 லட்சம் செலவில் வழங்கப்படும். 

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்று அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியருக்கு மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுவதைப் போன்று ரூ.10,000, ரூ.7,000, ரூ.5,000 என்ற அளவில் பரிசுகள் வழங்கும் திட்டம் புதிதாக இந்த ஆண்டு தொடங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு  ரூ.44 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும்.  

கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களை அரசு பொதுத் தேர்வில் 95 விழுக்காட்டிற்கு அதிகமாக தேர்ச்சி பெறச் செய்யும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலா ரூ.10,000 பரிசுத் தொகை வழங்குவதுடன் நற்சான்றிதழும் வழங்கப்படும்.  இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.6 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படும். கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு ஏற்கனவே ஒப்பளிக்கப்பட்ட 51 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரணடைப்பு செய்து அதற்கு பதிலாக 51 தமிழாசிரியர் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு வழங்கப்படும். 

தமிழ்நாடு மாநில ஹஜ்குழு நிர்வாக செலவிற்காக அரசு வழங்குகின்ற மானிய தொகை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் ஆக  உயர்த்தி வழங்கப்படும். 

மைய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 விழுக்காடு இடஒதுக்கீட்டின் பயனைப் பெறுவதற்கான இதர பிற்படுத்தப்பட்ட  வகுப்பினர் சான்றிதழ் பெறுவதில் சிரமங்கள் உள்ளதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனை களையும் பொருட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ் பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள், எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து இணையதளம் மூலம் தெரிவிப்பது உடனடியாக நிவாரணம் பெற ஏதுவாக மென்பொருள் உருவாக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!