முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்ணா விரதத்தை கைவிட அன்னா ஹசாரே மறுப்பு

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி,ஆக.25 - ஊழலை ஒழிக்க ஜனலோக்பால் அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உண்ணாவிரதம் 9 நாளாக நீடித்து வருகிறது. நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு போராட்டத்தை அடக்கி விடலாம் என்று முதலில் மத்திய அரசு நினைத்தது. ஆனால் நாடெங்கும் மக்களின் அமோக ஆதரவு எழுந்ததால் மத்திய அரசு ஹசாரே குழுவுடன் ரகசிய பேச்சை தொடங்கியது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆன்மீகவாதியுடன் பேச மறுத்த ஹசாரே குழுவினர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோரிடம் மட்டுமே பேசுவோம் என்று நிபந்தனை விதித்தனர். இதையடுத்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மன்மோகன்சிங் நியமித்தார். பிரபல ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கரும், ஹசாரே குழு மத்திய அரசு இடையே பாலமாக இருந்து பேச்சுவார்த்தை தொடங்க ஏற்பாடு செய்தனர். 

அதன் பயனாக நேற்று முன்தினம் பிற்பகல் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் சல்மான் குர்ஷித்தை ஹசாரே குழுவை சேர்ந்த பிரசாந்த்பூஷன், கிரண்பேடி, அரவிந்த்கெஜரிவால் ஆகியோர் சந்தித்து பேசினர். முதல் சுற்று பேச்சுவார்த்தை சுமூக தீர்வு காணும் வகையில் அமைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அவர்கள் மீண்டும் கூடி சுமார் மூன்றரை மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. அப்போது லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்களில் இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 

ஹசாரே குழு தயாரித்த ஜனலோக்பால் பரிந்துரைகளில் சுமார் 80 சதவீதத்தை  மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்பதையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தகவல்களை பிரதமர் மன்மோகன்சிங் ஹசாரேவுக்கு எழுதியுள்ள கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே ஜனலோக்பால் மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப சபாநாயகர் மீராகுமாரிடம் மத்திய அரசு கேட்டுக் கொள்ளும் எனத் தெரிகிறது. இருந்தாலும் சில முக்கிய விஷயங்களில் மட்டும் இன்னமும் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை. குறிப்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழலை விசாரிக்கும் லோக்அயுக்த அமைப்பு லோக்பால் குழு கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்பதை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. 

யார் யாரிடம் எத்தகைய விசாரணை மேற்கொள்வது என்ற வரம்பை நிர்ணயிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அது போல ஜனலோக்பால் மசோதாவில் எவையெல்லாம் ஏற்கப்படும் என்பதை எழுத்து மூலமாக தர வேண்டும் என்று ஹசாரே குழு வற்புறுத்தி வருவதையும் அரசு ஏற்றுக் கொள்ள தயங்குகிறது. மேலும் வரும் 30 ம் தேதிக்குள் நடப்பு மழைக்கால கூட்டத் தொடரிலேயே ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதை ஏற்க இயலாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்றலாம் என்று மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு இந்தளவுக்கு இறங்கி வந்திருப்பதே ஹசாரே குழுவுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. எனவே சுமூக தீர்வு ஏற்படும் சூழ்நிலைகள் தோன்றியுள்ளன. இதற்கிடையே நேற்று காலையிலும் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றொரு பக்கம் பிரதமர் மன்மோகன்சிங் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபையை கூட்டி ஆலோசனை நடத்தினார். நேற்று மதியம் வரை இரு தரப்பினரும் தங்கள் நிலையில் திருப்தியாக உள்ளனர். மத்திய அரசு தனது முடிவை எழுத்துப்பூர்வமாக தந்து விட்டால் சரியாகி விடும் என்று கிரண்பேடி கூறியுள்ளார். எனவே ஹசாரேயின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்