முக்கிய செய்திகள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1360 குறைந்தது

வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2011      வர்த்தகம்
Image Unavailable

 

சென்னை,ஆக.26 - தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு பவுன் தங்கத்திற்கு நேற்று ரூ.1360 குறைந்தது. இது போதாது. இன்னும் குறைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தங்கத்தின் விலை கடந்த ஆனி மாதம் ஒரு பவுனுக்கு செய் கூலி, சேதாரத்தை சேர்த்து ரூ.19 ஆயிரத்து 600 வரை விலை இருந்தது. அடுத்து வருவது ஆடிமாதமாக இருப்பதால் திருமணம் போன்ற விஷேங்கள் அதிகம் இருக்காது என்பதால் தங்கத்தின் விலையில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குமாறாக தங்கத்தின் விலை உயர்ந்தது. இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.16 ஆயிரத்து 40-ல் இருந்து 20 ஆயிரத்து 600 அளவுக்கு உயர்ந்து (செய் கூலி சேதாரம் இல்லாமல்) இதை சேர்த்தால் ஒரு பவுன் தங்கத்தின்விலை 25 ஆயிரம் அளவுக்கு இருக்கலாம். இப்படி ஆடி மாதத்தில் தங்கம் விலை அதிகமாக உயர்ந்ததால் ஏழைகளும், நடுத்தர மக்களும் குறிப்பாக பெண் பிள்ளைகளை அதுவும் திருமணம் வயதில் வைத்திருப்பவர்கள் கதி கலங்கிப்போனார்கள். ஆடியிலேயே இப்படி தங்கம் விலை உயர்ந்தால் விஷேங்கள் நிறைந்த ஆவணி மாதத்தில் தங்கம் விலை ஒரு பவுனுக்கு 30 ஆயிரம் வரை போய்விடலாம் என்று அஞ்சினர். ஆவணி மாதத்திலும் ஒரு சில நாட்கள் தங்கம் விலை அதிகரித்தது. ஆனால் கடந்த பல நாட்களாக தங்கத்தின் விலை இறங்குமுகமாக இருக்கிறது. நேற்றுமுன்தினம் ஒரு பவுனுக்கு ரூ. 140 வரை குறைந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ.230 வரை குறைந்தது. நேற்று ஒரு பவுனுக்கு அதிரடியாக ரூ.ஆயிரத்து 360 குறைந்துள்ளது. இது ஓரளவுக்கு மக்கள் வயிற்றில் பால் வார்த்தாலும் இன்னும் தங்கத்தின் விலை குறைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்ததால் ஆடி மாதத்தில் தங்கம் விலை அதிகரித்தது. அதாவது முதலீட்டாளர்கள் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்ததே தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது ஜப்பானின் கடன் வாங்கும் தரம் குறைந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீட்டை அதிகரித்தால் தங்கம் விலை மீண்டும் உயரும் அபாயமும் இருக்கிறது. தங்கம் விலை குறையாமல் இருக்க அதன் தேவையை நாம் குறைக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: