முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயேந்திரர் வழக்கை விசாரிக்க ஐகோர்ட் தடை

வெள்ளிக்கிழமை, 26 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஆக.26 - ஜெயேந்திரர் மீதான சங்கரராமன் கொலை வழக்கை புதுச்சேரி நீதிமன்றம் விசாரிக்க சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு: காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ராமசாமி வழக்கை விசாரித்து வந்தார். இந்த நிலையில் புதுச்சேரியில் நடக்கும் சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று சுந்தரராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அவரது மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜெயேந்திரர், பெண் உதவியாளர், 2 இடைத் தரகர்கள் மற்றும் நீதிபதி ஆகியோர் பேசும் உரையாடல் சி.டி. வெளியாகி உள்ளது. சங்கரராமன் கொலை மற்றும் பணம் பட்டுவாடா குறித்து இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அந்த சி.டி. உரையாடல் உண்மையாக இருந்தால் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஐகோர்ட் விஜிலென்ஸ் பதிவாளரிடம் அதுபற்றி புகார் அளித்தேன். அந்த மனு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். புதுச்சேரி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். 

சுந்தரராஜன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஐகோர்ட் நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயேந்திரர் மீதான சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். மேலும் விஜிலென்ஸ் பதிவாளர் 8 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!