முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் 2,427 வீடுகள்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.27 - சென்னை உள்பட 13 மாவட்டங்களில் ரூ.340 கோடி செலவில் 2,427 வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீது விளக்கம் அளித்து அமைச்சர் வைத்திலிங்கம் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: மக்களின் வீட்டுவசதி தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சென்னையில் 723 அடுக்குமாடி குடியிருப்புகளும் சேலத்தில் 16 அடுக்குமாடி குடியிருப்புகளும் காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, சேலம் மாவட்டம் கோட்டகவுண்டம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம் காளப்பட்டி, தருமபுரி மாவட்டம் ஜெட்டிஹல்லி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் 566 வீடுகளும், காஞ்சிபுரம் மாவட்டம்  ஆலப்பாக்கம், கடலூர், அரியலூர், விருதுநகர் மாவட்டம் பாளையம்பட்டி, தேனி மாவட்ட ஆண்டிபட்டி, மதுரை மாவட்ட தோப்பூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் 1122 மனைகளும், ஆக மொத்தம் 2427 வீட்டுவசதி அலகுகள் ரூ.340 கோடி செலவில்  முதல்வர் உத்தரவிட்டுள்ளதின் பேரில் உருவாக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் 1963-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட 27 வாரிய வாடகைக் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையிலுள்ளன.

முதல்வரின் உத்தரவின்பேரில் பழுதடைந்த அக்குடியிருப்புகளை இடித்துவிட்டு, தரைத்தளம் மற்றும் மூன்று மாடிகளுடன் கூடிய 44 புதிய குடியிருப்புகள் ரூ.11.80 கோடி (நிலத்தின் மதிப்பு நீங்கலாக) செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னை நந்தனத்தில் நகர மேம்பாட்டு அறக்கட்டளையால்  1959-ம் ஆண்டில் கட்டப்பட்ட மிகவும் பழுதடைந்த நிலையிலுள்ள 119 குடியிருப்புகளை  முதல்வரின் உத்தரவின்பேரில் அக்குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக தரைத்தளம் மற்றும் நான்கு மாடிகளுடன் கூடிய 474 குடியிருப்புகள் ரூ.77.70 கோடி (நிலத்தின் மதிப்பு நீங்கலாக) செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் புதியதாக வீட்டுவசதி வாரியத்தால் 100 வீடுகள் ரூ.20.85 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கத்திய பெரிய சாலை மற்றும் மாதவரத்தின் அருகில் உள்வட்டச் சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மஞ்சம்பாக்கத்தில் மிகப்பெரிய சரக்குந்து வாகன நிறுத்துமிடம் ஒன்று, ஒரே நேரத்தில் சுமார் 400 சரக்குந்து வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் ஒருநாளைக்கு குறைந்தது 1000 சரக்குந்து வாகனஙகள் வந்து செல்லும் வகையிலும் அமைக்கப்படவுள்ளது. இப்பணி நடப்பாண்டில் துவக்கப்பட்டு 18 மாதங்களில் முடிக்கப்படும்.

முதல்வரின் உத்தரவின்பேரில் சென்னை கோயம்பேட்டியிலுள்ள புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நகரங்களுக்கிடையேயான இரண்டு துணைப் பேருந்து நிலையங்கள் வேளச்சேரியில் 12 ஏக்கர் பரப்பளவிலும், மாதவரம் பேருந்து வளாகத்தில் 8 ஏக்கர் பரப்பளவிலும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் ஏற்படுத்தப்படவுள்ளது.

காஞ்சிபுரம் உள்ளூர் திட்டக்குழுமப் பகுதியை 25 கூடுதல் கிராமங்களுடன் விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த செங்கல்பட்டு வட்டாட்சி பகுதியை உள்ளடக்கி (மாமல்லபுரம் உள்ளூர் திட்டக்குழுமப்பகுதி, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமப் பகுதி மற்றும் சென்னை பெருநகர்  வளர்ச்சிக் குழுமப் பகுதியின் பகுதிகளை தவிர்த்து) செங்கல்பட்டு தனித்த உள்ளூர் திட்டக்குழுமத்தை கூட்டு உள்ளூர் திட்டக்குழுமமாக விரிவாக்க செய்யவும், கோவில்பட்டி, இராசபாளையம், கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் தருமபுரி  ஆகிய தனித்த உள்ளூர் திட்டப்பகுதிகளை கூட்டு உள்ளூர் திட்டப்பகுதிகளாக விரிவாக்கம் செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

புராதன நகர வளர்ச்சி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகையை நகரங்களின் தன்மையை பொறுத்து ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1.00 கோடியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தும் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு நகராட்சிக்கும் திட்டமதிப்பீட்டில் 75 சதவிகிதம் வழங்கப்படும் அதிகபட்ச மானியத்தொகையை மாநகராட்சிகளுக்கு ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1.00 கோடியாகவும் நகராட்சிகளுக்கு ரூ.25.00 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் உத்தரவின்பேரில் பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஒரு பூங்காவிற்கு ரூ.2.25 லட்சம் என வழங்கப்படும் மானியத் தொகையை அதிகபட்சமாக ரூ.10 லட்சமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்