முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

106 புதிய வழித்தடங்களை துவக்கிவைத்தார் முதல்வர்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.27 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 196 புதிய பேருந்துகளை வழங்கி 106 புதிய வழித் தடங்களைத் துவக்கி வைத்தார்.அப்போது விபத்தில்லாமல் பணியாற்றுங்கள் என்று டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களான, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 36 பேருந்துகள், சென்னை அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 23 பேருந்துகள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 56 பேருந்துகள், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 13 பேருந்துகள் மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 63 பேருந்துகள் என மொத்தம் 196 புதிய பேருந்துகளை வழங்கினார்.  

பொதுமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளுக்குப் புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் புதிய வழித் தடங்கள் அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கை மனுக்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கொடுத்திருந்தனர்.             

அம்மனுக்களை பரிசீலித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கைகளை ஏற்று பொதுமக்கள் பயனடையும் வகையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு 36 வழித்தடங்கள், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 23 வழித்தடங்கள், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 30 வழித்தடங்கள், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 6 வழித்தடங்கள் மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 11 வழித்தடங்கள் என மொத்தம் 106 புதிய வழித்தடங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார்.           

இந்நிகழ்ச்சியில் ஏழு புதிய பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கு பேருந்தின் சாவிகளை வழங்கி வாழ்த்தி, ஓட்டுநர்கள் தங்களது பணியினை பாதுகாப்போடு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். 

 பின்னர், தமிழக முதலமைச்சர் ஏழு புதிய பேருந்துகளைக் கொடி அசைத்து துவக்கி வைத்து பேசியதாவது: 

அனைவருக்கும் வணக்கம். தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களின் சார்பில் புதிதாக 196 பேருந்துகளை துவக்கி வைத்ததில் உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த பேருந்துகளை ஒட்டும் ஒட்டுநர்கள் பாதுகாப்பாக தங்கள் பணியினை செய்ய வேண்டும். தங்களுக்கும் அவர்களை நம்பி பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும் எந்தவிதமான ஆபத்துமின்றி நல்ல முறையில் பணியாற்ற வேண்டுமென்று அனைவரையும் கேட்டுக் கொண்டு உங்கள் அனைவருக்கும் எனது இதயnullர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன் நன்றி, வணக்கம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 196 புதிய பேருந்துகளில், 106 புதிய பேருந்துகள் இன்று புதிதாக தமிழக முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட 106 வழித்தடங்களிலும், மீதமுள்ள 90 புதிய பேருந்துகள் ஏற்கெனவே உள்ள வழித்தடங்களிலும் இயக்கப்படவுள்ளன. இவ்விழாவில், போக்குவரத்துத்துறைச் செயலாளர் முகமது நசிமுதீன் வரவேற்புரையாற்றினார்.  சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் எஸ். பதி நன்றி தெரிவிக்கையில், பல்லாண்டு காலமாக எந்தவொரு முதலமைச்சரும் பணிமனைக்கு நேரில் வராத நிலையில் பணிமனைக்கு நேரில் வருகை தந்து 196 புதிய பேருந்துகளை வழங்கியும் 106 புதிய வழித்தடங்களை துவக்கியும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இவ்விழாவில்,  போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை பணியாளர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்