முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரானைட் குவாரியில் அழகிரி மகன் பலகோடி முறைகேடு செய்துள்ளார்-வேலுமணி பரபரப்பு பேட்டி

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

மதுரை, செப். - 5 - மதுரை மாவட்டம் மேலூர் அருகே சர்க்கரைபீர் மலையில் உள்ள மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதிக்கு சொந்தமான குவாரிகள் மற்றும் பினாமி குவாரிகளை தமிழக தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். அப்போது கிரானைட் துறையில் அழகிரி பலகோடி முறைகேடு செய்திருப்பதாகவும், இந்த விஷயத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  தமிழக சட்டசபையின் பட்ஜெட்  கூட்டம் தற்போது நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 5 நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் அவரது மகன் துரை தயாநிதிக்கு சொந்தமான குவாரிகள் பற்றி சட்டசபையில் பேசப்பட்டது. அப்போது இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் வேலுமணி, சில குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  ஆனால் மத்திய அமைச்சர் அழகிரி இதற்கு மறுப்பு தெரிவித்து நோட்டீசும் அனுப்பினார். இந்நிலையில் நேற்று மதுரை மாவட்டம் மேலூருக்கு வந்த அமைச்சர் வேலுமணி, சர்க்கரைபீர் மலையில் உள்ள அழகிரி மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான  குவாரிகளை பார்வையிட்டார். இதுதொடர்பாக அமைச்சர் வேலுமணியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-  சட்டசபை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது கனிமம் தொடர்பான முறைகேடு குறித்து கேள்வி  கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர்  என்ற முறையில் நான் பதிலளித்தேன். அப்போது  மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கனிமம் எடுத்திருப்பதாக  கூறியதற்கு மறுப்பு தெரிவித்த அழகிரி, என் பெயரிலோ, என் குடும்பத்தினர் பெயரிலோ கனிமம் வெட்டி எடுக்கவில்லை என்றும், என் மீது தவறான முறையில் சட்டசபையில் பேசிய அமைச்சர் மீது வழக்கு தொடருவேன்  என்றும் அறிக்கை வெளியிட்டார்.  அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க  நான் மதுரை மாவட்டத்தில் கீழவளவு சுரங்கம், கீழையூரில் உள்ள ரெங்கசாமிபுரம் சுரங்கம் மற்றும் மில்கேட் மெருகூட்டும் மையம் ஆகிய இடங்களுக்கு சென்று இன்று (நேற்று) ஆய்வு மேற்கொண்டேன். இதன் மூலம் சட்டத்திற்கு புறம்பாக தவறான முறையில் கனிமம் எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது. மத்திய  அமைச்சர் அழகிரி மகன் துரைதயாநிதி மற்றும் நாகராஜன் ஆகியோர் ஒலம்பஸ் சுரங்க நிறுவனம் என்ற பெயரில் 2006 முதல் தமிழ்நாடு கனிம நிறுவனம் அருகில் பட்டா நிலத்தில் உள்ள கனிம சுரங்கத்தில் முறைகேடான முறையில் கடந்த 5 வருடங்களாக சட்டத்திற்கு புறம்பாக தவறான முறையில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் கற்களை வெட்டியெடுத்துள்ளனர். ஆனால் ஓராண்டுக்கு முன்பாகவே கனிமம் எடுப்பதற்கு உரிமம் முடிவுபெற்றதாக கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பே இந்த தவறான தகவலை பதிவு செய்துள்ளார்கள். மத்திய அமைச்சர் அழகிரி அனைத்து துறைகளிலும் தலையிட்டு முறைகேடு செய்துள்ளார். குறிப்பாக கிரானைட் துறையில் அதிக அளவில் பல கோடி மதிப்பில் முறைகேடு செய்துள்ளார். துறை மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு அதிக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 10 சதவீதம் அனுமதி பெற்றுவிட்டு 90 சதவீதம் அனுமதி பெறாமல் முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக கனிமச் சுரங்கம் வெட்டி எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி துறை ரீதியாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பான 15 மேற்பட்ட கனிம சுரங்கங்களுக்கு துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர்  கூறினார். இந்த ஆய்வின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,  சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், ஆர்.சாமி, தமிழரசன், எம்.வி.கருப்பையா, முன்னாள் எம்.பி.ராஜன்செல்லப்பா, மாவட்ட கலெக்டர் உ.சகாயம்,  இணை இயக்குனர் (சென்னை) ஜெயக்குமார், தமிழ்நாடு கனிம நிறுவன பொது மேலாளர்(சென்னை) மனோகரன், கோட்ட மேலாளர் தங்கபாண்டியன், மதுரை துணை இயக்குனர் (பொறுப்பு) சையது பஷீர் அகமது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் மற்றும் பலர் உடன் சென்றனர்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்