முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்-ராமதாஸ் கோரிக்கை

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை.செப்.- 5 - தமிழகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில்  ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு   பா.ம.க. நிறுவனத்தைவர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்துவன் முதல் கட்டமாக பொதுப்பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த கட்டமாக பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும், கற்றல் சூழலையும் மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர்  ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இருந்தால் தான் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க முடியும் என்பதை உணர்ந்து மொத்தம் 17,387 ஆசிரியர் பணியிடங்களையும், 16,549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களும் ஏற்படுத்தப்படும் என்றும் பள்ளிகளில் காலியாக உள்ள 14,377 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி ஒட்டுமொத்தமாக மொத்தம் 48,313 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், இந்த ஆசிரியர்கள் அனைவரும் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள்? என்பதில் நிலவும் குழப்பம் தான் அவர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வந்திருக்கின்றனர்.
ஆனால், தற்போது அ.தி.மு.க. அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்றும், போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் தான் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர். ஆசிரியர் பணிக்காக படிக்கும் அனைவரும் முதலில் பட்டப்படிப்பையும், பின்னர் கல்வியியல் படிப்பையும் தேர்வு எழுதிதான் முடிக்கின்றனர். இத்தகைய நிலையில், ஆசிரியர் பணிக்காக மீண்டும் ஒரு போட்டித் தேர்வை நடத்துவது, தமிழக அரசின் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேர்வுகளின் தரத்தின் மீதே ஐயம்கொள்வது போன்றதாகும்.
2010ம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1,22,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். பதிவு மூப்பு அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்குவது தான் நியாயமானதாக இருக்கும்.
மாறாக, போட்டித்தேர்வுகளை நடத்துவது பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்திவிடும்.  எனவே, ஆசிரியர் பணிக்காக காத்துக்கிடக்கும் 7 லட்சம் பேரின் நலன் கருதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். இது தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தினமான நாளை(இன்று) வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்