முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டாவது பசுமைப்புரட்சியை ஏற்படுத்த அரசு திட்டம்

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,செப்.6 - இரண்டாவது பசுமைப்புரட்சியை ஏற்படுத்தவும் அதை சாதிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தனது அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதுவே தமது குறிக்கோள் என்றும் தமிழக மக்களுக்கு அதை அர்ப்பணிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார். சென்னையில் தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிக்கி என்ற வர்த்தக கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். முன்னதாக அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தபோது இந்த கூட்டமைப்பின் தலைவர் ஹாரீஸ் மரிவாலா முதல்வருக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா செயற்குழுக்கூட்டத்தை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-
இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவரையும் நான் அன்போடு வரவேற்கிறேன் மேலும் பிக்கி அமைப்பின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை நான் பாராட்டுகிறேன். பெரிய சாதனைகளை நிகழ்த்தி இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நோக்கம் இருக்கும். அவர்களுக்கு லட்சியமும் இருக்கும். அது வெற்றிகரமான தொழிலதிபர்களான உங்களுக்கும் பொருந்தும்.
தேசிய சராசரி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் தமிழகத்தை முன்னேற்ற எனது அரசு உறுதிபூண்டுள்ளது. வறுமை என்பது ஒரு சவாலாகும். ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு நலத்திட்டங்கள் அவசியம். அந்த வகையில் இரண்டாவது பசுமைப்புரட்சியை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க எனது அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டங்கள் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும். தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் 5 ஆண்டுகளுக்குள் விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரிப்பதே எங்கள் லட்சிமாகும். அதற்காக உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பம் கையாளப்படும். மின்சார உற்பத்தியை அதிகரிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்பட்டு மின்மிகை மாநிலமாக தமிழகம் ஆக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தை மிகச்சிறந்த மாநிலமாக்க வேண்டும் என்பது எனது குறிக்கோள். எனவே இங்கே தொழில் தொடங்க முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். சந்தர்ப்பங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. உங்கள் கதவை தட்டுக்கின்றன. எனவே அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கனவுகளை நினைவாக்க தமிழகம் ஒரு கிரியாயூக்கியாக செயல்படும். ஆகவே வளர்ச்சியை ஏற்படுத்த வாருங்கள். இந்த செயற்குழுக்கூட்டம் வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார். விழாவில் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்