முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி தனியார் காட்டேஜில் இருவர் அடித்துக் கொலை

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

ஊட்டி, செப்.7 - ஊட்டி தனியார் காட்டேஜில் இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க டி.எஸ்.பி.,தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றுலா வழிகாட்டுநராக பணியாற்றி வருபவர் மகேந்திரன். இவர் கூட்செட் சாலை பகுதியில் ஒன்னஸ் காட்டேஸ் என்ற பெயரில் தனியார் காட்டேஜ் நடத்தி வருகிறார். இவரது காட்டேஜில் கேர்டேக்கராக பணிபுரிந்து வந்தவர் தஸ்தஹீர்(30). கடந்த 4-ந் தேதி மாலையில்  ஒரு வெள்ளைநிற டவேரா வாகனத்தில் வந்த பெயர் தெரியாத 5 பேர் இந்த காட்டேஜில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் காட்டேஜ்க்கு சென்ற மகேந்திரன் உள்ளே தஸ்தஹீர் உட்பட 2 பேர் இறந்து கிடப்பதை கண்டுள்ளார். இது குறித்து ஜி-1 போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஜி-1 ஆய்வாளர் சுரேஷ்குமார் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிசாமுதீன், கூடுதல் கண்காணிப்பாளர் காசி விஸ்வநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தது அந்த காட்டேஜின் கேர்டேக்கர் தஸ்தஹீர்(30) மற்றும் ஊட்டியைச் சேர்ந்த அப்துல் ஹமீது(25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற விவரம் தெரியவந்தது. உடனடியாக போலீஸ் மோப்பநாய் அக்னி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. விசாரணைக்குப்பின் தஸ்தஹீர், அப்துல் ஹமீது ஆகியோரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிசாமுதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:​
ஊட்டி கூட்செட் பகுதியில் உள்ள ஒரு வீட்டை சுற்றுலா வழிகாட்டுநரான மகேந்திரன் என்பவர் வாடகைக்கு எடுத்து காட்டேஜ் நடத்தி வருகிறார். இந்த காட்டேஜில் தஸ்தஹீர் என்பவர் கேர்டேக்கராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 4-ந் தேதி மாலையில் டவேரா காரில் வந்த 5 பேர் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் இன்று (நேற்று)காலையில் மகேந்திரன் வந்து பார்த்த போது தஸ்தஹீரும், மற்றொருவரும் இறந்து கிடப்பதாக மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவம் நடத்த இடத்தை பார்த்த போது குடிபோதையில் தகராறு ஏற்பட்டு அதனால் உருட்டுக்கட்டையால் தாக்கி தஸ்தஹீரும், மற்றொருவர் சட்டைப்பையில் அப்துல் ஹமீது என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்த ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த காட்டேஜ் முறையான அனுமதியில்லாமல் நடத்தப்பட்டுள்ளதால் அறையில் தங்கியவர்களின் முகவரி தெரியவில்லை. இருந்தும் அனைத்து சோதனை சாவடிகளிலும் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்று அனுமதியில்லாமல் நடத்தப்படும் காட்டேஜ்கள் குறித்து அந்தந்த காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் நடத்தப்படும் காட்டேஜ்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்படும். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக ஜி-1 காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு துணைகண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்