முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கடற்கரை பகுதிகளில் தூண்டில் வளைவுகள்: முதல்வர்

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.8 - தமிழகம் முழுவதும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் தூண்டில் வளைவுகள் ஏற்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, சாத்தியமுள்ள இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். இதுகுறித்த விபரம் வருமாறு:-   

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி பதில் நேரத்தின்போது நாகர்கோவில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், பவுன்ராஜ்(அ.தி.மு.க), உலகநாதன்(சி.பி.ஐ.) ஆகியோர் கேட்ட கேள்வியும், அதற்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர் ஜெயபாலும் அளித்த பதில்களும் வருமாறு:

நாஞ்சில் முருகேசன்:நாகர்கோவில் தொகுதி, ராஜாக்கமங்கலத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க அரசு ஆவண செய்யுமா?

அமைச்சர் ஜெயபால்: இதற்கான ஆணை பிறப்பிக்கப்படும்.

பவுன்ராஜ்:தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுமா?

அமைச்சர் ஜெயபால்: இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகநாதன்(சி.பி.ஐ): திருத்துறைப்பூண்டியில் 2 மீன்பிடி துறைமுகங்கல் மற்றும் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று தி.மு.க. ஆட்சியில் கூறினார்கள். ஆனால், அமைக்கப்படவே இல்லை. இந்த ஆட்சியில் அது நிறைவேற்றப்படுமா?

முதல்வர் ஜெயலலிதா (குறுக்கிட்டு): தமிழ்நாட்டில் 1,076 கி.மீ. நீளத்திற்கு கடற்கரை உள்ளது. உலகிலேயே 2வது நீண்ட கடற்கரை இதுவாகும். இந்த கடற்கரை பகுதிகளில் எங்கெங்கு கடல் அரிப்பு ஏற்படுகிறதோ அங்கு தூண்டில் வளைவு அமைக்கப்படும். அது தான் இந்த அரசின் திட்டம். 

4 லட்சம் குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். எனவே, ஆங்காங்கே தூண்டில் வளைவுகள் நிச்சயம் அமைக்கப்படும். மேலும், எங்கெங்கு சாத்தியக்கூறுகள் உள்ளதோ அங்கெல்லாம் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டு, 5 ஆண்டில் நிறைவேற்றித் தரப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்