முன்னாள் அமைச்சர் மகன் நில அபகரிப்பு வழக்கில் கைது

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

கோவை: நில மோசடி வழக்குத் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ் பாரி இன்று கோவையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பல்லடத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் புகாரின் பேரில், பைந்தமிழ் பாரி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் மதுரை மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளரும், மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமானவருமான ஜெயராமன் இன்று கைது செய்யப்பட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன் மேயர் தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இவர் மதுரை மாவட்ட திமுக அலுவலகத்தில் மனுக்ளை பெற்று வந்தார். இந் நிலையில், இவர் மீது, மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞர் வீட்டில் நள்ளிரவு நேரத்தில் சோடா பாட்டிலும் துண்டு பிரசுரமும் வீசியதாக புகார் பதிவு செய்யப்பட்டது.

மேலும் இதே புகாரின் அடிப்படையில் மதுரை துணை மேயர் மன்னர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜெயராமனும், மன்னனும் தலைமறைவாயினர். இந்நிலையில் இன்று அதிகாலை ஜெயராமன் கொடைக்கானல் அருகே கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொட்டு சுரேஷை குண்டர் சட்டத்தில் அடைத்தது சரியே-குண்டாஸ் போர்டு:

இதற்கிடையே அமைச்சர் அழகிரியின் வலக்கரமாக இருந்த பொட்டு சுரேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது செல்லும் என்று குண்டாஸ் போர்டு தெரிவித்துள்ளது.

நில அபகரிப்பு, மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பொட்டு சுரேஷ் மீது தொடரப்பட்டுள்ளன. அவரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பொட்டு சுரேஷ் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு முன்னாள் நீதிபதிகள் ரகுபதி, மாசிலாமணி, ராமன் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை அதிகாரியான மதுரை இன்ஸ்பெக்டர் ஆஜராகி பொட்டு சுரேஷ் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளின் ஆதாரங்களை சமர்பித்து, அதற்கு விளக்கமும் அளித்தார்.

ஆதாரங்களைப் பார்த்த நீதிபதிகள் பொட்டு சுரேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது சரியான நடவடிக்கை தான் என்று தீர்ப்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: