மதுரையில் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கைது

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.8  - மதுரையில் அ.தி.மு.க. வக்கீல் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று சோடா பாட்டில் வீசி தாக்கிவிட்டு சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். 

இந்த வன்முறை சம்பவம் குறித்த விபரம்:​மதுரை பி.பி.சாவடி பகலவன் நகரை சேர்ந்தவர் வக்கீல் தமிழ்செல்வன். இவர் அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளராகவும், மதுரை மாவட்ட கோர்ட்டில் அரசு வக்கீலாகவும் பணிபுரிந்து வருகிறார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் ஒரு மர்ம கும்பல் சோடா பாட்டில் வீசி தாக்கிவிட்டுச் சென்றது. இந்த சம்பவம் குறித்து வக்கீல் தமிழ்செல்வன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் மதுரை மாவட்ட கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்து வருகின்றனர். இந்த ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வரும்போது நான் எதிர்ப்பு தெரிவித்துவருவதால் செல்போனில் சிலர் தொடர்ந்து எனக்கு மிரட்டல் விடுத்துவந்தனர். 

இந்த நிலையில் என் வீட்டின் மீது சோடாபாட்டில் வீச்சு  நடந்துள்ளது.  இந்த சம்பவம் துணைமேயர் மன்னன், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஜெயராம் ஆகியோர் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.  இவ்வாறு இந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்

அதன் பேரில் கரிமேடு போலீசார் துணைமேயர் மன்னன், இளைஞரணி அமைப்பாளர் ஜெயராம், உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமை போலீசார் கைது செய்தனர். அவரை மதுரை ஆயுதப்படை மைதானத்திற்கு அழைத்து சென்று சோடாபாட்டில் வீச்சு சம்பவம் மற்றும் அவர் மீதான புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தலைமறைவாக உள்ள துணைமேயர் மன்னனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: