கருணாநிதி வீட்டில் அரசு நிலங்கள் மீட்கப்படும்

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.8 - தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும், கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்திலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்கள் மீட்கப்படும் என்று சட்டமன்ற பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி உறுதிபட தெரிவித்தார். தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி பதில் நேரம் முடிவடைந்ததும் அ.தி.மு.க. உறுப்பினர் வெற்றிவேல் (ஆர்.கே.நகர்) ஒரு பிரச்சினையை கிளப்பினார். அப்போது அவர் கூறியதாவது:

தி.மு.க. தலைவர் கருணாநிதி கோயபல்ஸ் வேலையை மீண்டும் துவங்கிவிட்டார். அவர் உறுப்பினராக இருந்துகொண்டும் அவைக்கு வராமல், வெளியில் இருந்து பொய்யான தகவல்களை தெரிவிக்கிறார்.   அறிவாலயத்திலும், அவரது வீட்டிலும் ஆக்கிரமித்து வைத்துள்ள நிலம், தொடர்பாக எழுந்த புகாருக்கு பதில் சொல்வதாக கூறி தவறான தகவல்களை தெரிவிக்கிறார். அறிவாலயம் முன்பு nullங்கா இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் அங்கு மற்றவர்கள் செல்வதற்கு பாதை இல்லை. இது தொடர்பாக பல போட்டோக்களை எடுத்து ஆதாரமாக வைத்துள்ளேன். ஒரு படத்தில் சன்டிவி என்ற பலகை உள்ளது.(பழைய போட்டோ). மற்றொரு படத்தில் கருவூலம் செல்லும் வழி என்று உள்ளது.  இன்று காலை கூட போட்டோ எடுக்கப்பட்டது. அதில் கலைஞர் டி.வி. என்ற பெயர் பலகை இருக்கிறது. ஆனால், எங்கும் பூங்காவுக்கு செல்லும் வழி கிடையாது. எனவே, இதற்கான வழியை ஏற்படுத்தி தந்து அந்த பூங்காவில் நான் நடைபயிற்சி மேற்கொள்ள ஆவனசெய்ய வேண்டும்.

கோபாலபுரத்தில் அவரது வீட்டில் இருக்கும் மாநகராட்சி நிலம் பற்றியும் தவறான அளவை சொல்கிறார். 13 அடி தான் என்கிறார். 60 அடி இடத்தை முழுங்கிவிட்டார். எனவே, அந்த நிலங்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். (இதுதொடர்பான சில புகைப்படங்களையும் வெற்றிவேல் சபையில் காட்டினார்)  

இவ்வாறு வெற்றிவேல் பேசினார்.

இதற்கு பதில் அளித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:​ மாநகராட்சிக்கு சொந்தமான இடம் அறிவாலயத்திலும், அவரது வீட்டின் பின்புறமும் உள்ளது. இதை மீட்க அரசு முறையான நடவடிக்கை எடுக்கும். அவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தை மற்றவர்களும் பயன்படுத்துவதாக கூறியுள்ளனர். அவர் தேவை என்றால் மற்றவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வார். தேவை இல்லை என்றால் விட்டு விடுவார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அவர்களையே கூடாநட்பு என்று கூறினார். காங்கிரசுக்கு 125 வயது என்கிறார்கள். வயது அதிகமானாலே கண்ணும் தெரியாது. காதும் கேட்காது. இதுபோன்று அவர்களும் கருணாநிதி சொன்னதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி என்றும் இளமையானது. சட்டப்படி அனைத்து நடவடிக்கையையும் எடுக்கும்.   தி.மு.க. எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்தித்து புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் தனது கடமையை செய்கிறது. தவறு செய்யவில்லை என்றால் nullநீதிமன்றத்தில் அதை நிரூபிக்கலாம். அதை விட்டு விட்டு ஜனாதிபதியிடம் செல்வது ஏன்? குற்றம் செய்தவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையிடம் மனு கொடுக்கிறார்கள். காவல்துறையினர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்கிறார்கள். இதன்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்கள். முதல்வர் ஜெயலலிதா ஆட்சி சட்டத்தின் படி முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கருணாநிதியிடம் உள்ள மாநகராட்சி சொத்தை மீட்டு எடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: