முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலசந்தருக்கு பால்கே விருது: ஜனாதிபதி வழங்கினார்

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி, செப்.10 - புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற 58 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பழம்பெரும் தமிழ்திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை வழங்கினார். சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தருக்கு வழங்கினார். விருதுடன் தங்கத் தாமரையும், ரூ. 10 லட்சத்திற்கான ரொக்கப்பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.  மேலும் ஜனாதிபதி, பாலசந்தருக்கு பொன்னாடையும் போர்த்தி கெளரவித்தார். 

2010 ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றார். அவர் விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றபோது அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் எழுந்து நின்று கரகோஷம் செய்தார். தனுசுக்கு விருதுடன் வெள்ளித்தாமரையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது நடிகை சரண்யாவிற்கும், சிறந்த டைரக்டர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதுகளை வெற்றிமாறனுக்கும், சிறந்த எடிட்டருக்கான விருதினை கிஷோருக்கும், சிறந்த நடன அமைப்பாளருக்கான விருதினை தினேஷ்குமாருக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருதினை தம்பி ராமையாவிற்கும், நடிகருக்கான சிறப்பு விருதினை இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரும் நடிகருமான ஜெயபாலனுக்கும், சிறந்த கவிஞருக்கான விருதினை கவிஞர் வைரமுத்துவிற்கும் ஜனாதிபதி வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்