முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் மத்திய மந்திரி ராசா மீது பாதுகாப்பு சட்டம் பாய்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.- 6 - தொலைதொடர்புத்துறை முன்னாஏள் மத்திய மந்திரி ராசா மீது பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. இது குறித்து சி.பி.ஐ.  அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஆ.ராசா மத்திய மந்திரியாக இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலில் வந்தவருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதிலும் பல தில்லுமுல்லுகள் நடைபெற்றது தெரிய வந்தது. விண்ணப்பத்திற்கான கடைசி தேதி திடீரென்று மாற்றப்பட்டது. தகுதியற்ற சில நிறுவனங்கள் உரிமம் பெற்றன. பல வங்கிகளும் இதற்கு உடந்தையாக செயல்பட்டன. அலைவரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமாக அரசுக்கு அதிகப்பட்சமாக ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தலைமை கணக்கு அதிகாரி வினோத் ராய் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அலைவரிசை ஊழல் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவும் இதனை விசாரித்து வருகிறது. அலைவரிசை ஊழல் குறித்து விசாரணை நடத்த மூத்த காங்கிரஸ் தலைவர் பி.சி. சாக்கோ தலைமையில் 30 எம்.பி.க்கள் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆ.ராசா, தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகூரா, ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியலிட்டீஸ் அதிபர் சாகித் உஷ்மான் பல்வான் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். எடிசலாட் டிபி, யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. தனது கூர்மையான பார்வையை பதித்துள்ளது. எடிசலாட் நிறுவனத்திற்கு பல்வா அதிபர் என்று கூறப்பட்டாலும் இதற்கு பின்னணியில் வேறுபல பெரும் பல பெரும் புள்ளிகள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. யூனிநார் நிறுவனம் நார்வே நாட்டுடன் தொடர்புடையது. லூர் நிறுவனம் எஸ்.ஆர். குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலி நிறுவனம் என்று தெரியவந்துள்ளது. பல பகை நாடுகளின் பின்னணியில் பல தொலைபேசி நிறுவனங்களுக்கு தொடர்பு உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இந்த நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பது சி.பி.ஐ.யின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமுலாக்க பிரிவு அதிகாரிகள் அலைவரிசை தொடர்பான விவகாரங்களை புலனாய்வு செய்ய தீவிரம் கொண்டுள்ளன. இதுவரை 63 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணை தொலைபேசி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் மட்டுமல்லாமல் சில எம்.பி.க்களும் அடங்குவர். 70 சதவீத புலனாய்வு பணி நிறைவு பெற்றதால் இம்மாதம் 31-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 

பகை நாடுகளின் பங்கு இந்த அலைவரிசை ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதால் ஆ.ராசா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்படும் என்று தெரிகிறது. இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூர்மையாக பரிசீலனை செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது இந்தியாவின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராசா தெரிந்தேதான் இந்த நிறுவனங்களுக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக அவர் ரூ. 3 ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. புலனாய்வு வாயிலாக கண்டறிந்துள்ளது. இந்த பணம் உள்நாட்டில் மட்டுமல்லாது 10-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இதுகுறித்து அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த நாடுகளும் ஒத்துழைப்பு அளிப்பதாக பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். இன்னும் சில நாட்களில் மேலும் சில பெரும் புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.ஐ.வட்டாரம் தெரிவிக்கிறது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்