முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க அழிந்து விடும் என கொக்கரித்த அழகிரி எங்கே? - செல்லூர் கே.ராஜூ

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,செப்.- 17 - அதிமுக அழிந்து விடும் என்று கொக்கரித்த மு.க. அழகிரி தற்போது எங்கே போனார். மதுரையை விட்டு ஓடிஒளிந்து விட்டாரா என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பினார்.    அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஆணைக்கினங்க மதுரை மாநகர் மாவட்ட தெற்கு 1 ம் பகுதி கழக அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 103 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரை ஓபுளாபடித்துறை எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு 1 ம்பகுதி கழக செயலாளரும், மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளருமான ஷ.ராஜலிங்கம் தலைமை வகித்தார். தெற்கு 2ம் பகுதி கழக செயலாளர் வி.கே.எஸ்.மாரிச்சாமி, தெற்கு 3ம் பகுதி கழக செயலாளர் எம்.ராஜபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் டி.ரத்தினவேல், சு.மாதவன், மதுரை மாநகர் மாவட்ட ஏ.கே.போஸ் எம்எல்ஏ, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.   கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று மூன்றே மாதகாலத்தில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். இந்தியா மற்றுமல்ல உலக தலைவர்களும் பாராட்டும் வகையில் தமிழகத்தில் ஒரு நல்லாட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் நடத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டு காலத்தில் நடைபெற்ற மக்கள் விரோத மைனாரிட்டி திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வாக்களித்து அதிமுகவை ஆட்சியில் அமர்த்தி முதல்வர் ஜெயலலிதாவை முதலமைச்சர் அரியணையில் அமர வைத்துள்ளார்கள். அவ்வளவு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நாள்தோறும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
     தமிழகத்தை சுரண்டி கொள்ளையடித்த கூட்டம் இந்த நாட்டைவிட்டே விரட்டப்பட்டு வருகிறது. ஆன்மீக நகரமான மதுரையில் திமுகவினர் அழகிரியின் தலைமையில் செய்திட்ட அட்டகாசங்கள் அனைத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி நடவடிக்கையால் இன்று ஒழித்துக்கட்டப்பட்டு விட்டது. மதுரை மக்கள் இன்று ஒரு சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறார்கள். மீனாட்சி சுந்தரேசுவரர் பட்டணத்தில் ஆன்மீகம் நிறைந்த மதுரை மண்ணில் ஆடியவன் எவனும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. 2007ம் ஆண்டு அதிமுக அழிந்து விடும், ஒழிந்து விடும் என்று கொக்கரித்த மு.க.அழகிரி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. மதுரையை விட்டே காணாமல் போய்விட்டார். இதைத்தான் நான் தேர்தலுக்கு முன்பே சொன்னேன். முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை பிடிப்பார். ஆடியவர்களுக்கு எல்லாம் அன்றைய தினம் முடிவு கட்டப்படும் என்று அப்போதே தெரிவித்தேன். அது இப்போது நடந்து விட்டது. திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்கள். எனக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ள கூட்டுறவு துறையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ததில் மட்டும் 634 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கேஸ் அடுப்புகள் வாங்கியதில் ரூ.164 கோடி ஊழல் நடந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் தங்கத்திற்கு பதிலாக போலி நகைகளை வைத்து பல கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழலில் ஈடுபட்டவர்களெல்லாம் தப்பிக்க முடியாது. ஒரு நாள் உள்ளே செல்லும் காலம் விரைவில் வரும்.
     கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு அமோக வெற்றியை தேடிதந்ததை போல் உள்ளாட்சி தேர்தலிலும் மக்களாகிய நீங்கள் அதிமுகவிற்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகின்ற மக்கள் நல வளர்ச்சி திட்டங்கள் மேலும், மேலும் தொடர அதிமுகவிற்கு நீங்களெல்லாம் வாக்களிக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளையும் அதிமுக கைப்பற்றி வெற்றி வாகை சூடியது என்ற செய்தியை முதல்வர் ஜெயலலிதாவின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்போதிருந்தே க டினமாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
    கூட்டத்தில் மதுரை மாநகராட்சி அதிமுக குழு தலைவர் பெ.சாலைமுத்து, அவைத்தலைவர் துரைப்பாண்டியன், பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கே.ஆர்.மோதிலால், மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி,  தொகுதி செயலாளர்கள் எஸ்.முருகேசன், எஸ்.குமார், எம்.ரவிச்சந்திரன், தெற்கு பகுதி இளைஞரணி செயலாளர் முத்திருளாண்டி, பாசறை செயலாளர் டி.வினோத்குமார், வடக்கு தொகுதி இணை செயலாளர் ஏ.பி.பாலசுப்பிரமணி, மாவட்ட பேரவை துணை தலைவர் புதூர் அபுதாகீர் மற்றும் செல்லூர் பாலமுருகன், கேசவபாண்டியம்மாள், கண்ணகி பாஸ்கரன், புதூர் பாப்பா, பி.புஷ்பா, தேனம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்