முக்கிய செய்திகள்

கூடம்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது - முதல்வர்

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,செப்.- 17 - கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.  கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது தான் என்பதை கருத்தில் கொண்டு, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்களை அன்புடன் கேட்டுக் கொள்வதோடு, கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்  என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  இது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வகுத்து, அந்தத் திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளவையாக இருக்க வேண்டும் என்பதிலும், அந்தத் திட்டங்களால் மக்களுக்கு பாதிப்போ, ஆபத்தோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் எனது தலைமையிலான அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இந்தியாவில் தற்போது 20 அணு உலைகள், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் இயங்கி வருகின்றன.  இவற்றின் மொத்த நிறுவு திறன் 4,780 மெகாவாட் ஆகும்.  உலக அளவில் எடுத்துக் கொண்டால், சுமார் 47 நாடுகளில், மொத்தம் 3,78,910 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட அணு மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.  திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு, 1988 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யாவின் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர் 1998 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஒப்பந்தம் 2001 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.  

இந்திய அணு மின் கழகத்தால் 2001 ஆம் ஆண்டு பணிகள் துவக்கப்பட்டு, தற்போது முதல் மின் நிலையத்தின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இரண்டு மின் நிலையங்களின் பணிகளும் முடிவடைந்தவுடன், இந்த அணு மின் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கப் பெறும்.
சில மாதங்களுக்கு முன்னர் ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக, புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட கதிரியக்க பிரச்சனை காரணமாக,  இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சில ஐயப்பாடுகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.  இதன் காரணமாக, தற்போது கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, அதனை மூடி விட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.  மேலும், இந்த அணு மின் நிலையத்தை உடனடியாக மூட வலியுறுத்தி இடிந்தகரையில் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளர்கள், அணு விஞ்ஞானிகள் ஆகியோருடன் எனது அரசு ஆலோசனை நடத்தியது.  அதன் அடிப்படையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை என்று கருதுகிறேன். கூடங்குளம் அணு மின் நிலையம், நில நடுக்கம் ஏற்படக் கூடிய சாத்தியம் இல்லாத, இரண்டாம் நிலை மண்டலத்தில் தான் உள்ளது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில், சிறந்த, மிகவும் பாதுகாப்பான அணு உலை குளிர்விப்பு முறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  அதாவது, ஒரு வகையிலான குளிர்விப்பு முறையே போதும் என்ற போதிலும், நான்கு விதமான குளிர்விப்பு தொடர் முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 7.5 மீட்டர் உயரத்தில் உள்ளதால், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும், அணுமின் நிலையத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.  2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கிய போதும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அணு உலைகளை இயக்கத்திலிருந்து நிறுத்தும் போதும், உலைகளை குளிர்விக்கத் தேவையான ஒரு டீசல் மின்னாக்கிக்கு பதில் நான்கு டீசல் மின்னாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டீசல் மின்னாக்கிகள், வெள்ளம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் கடல் மட்டத்திலிருந்து 9 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்டுள்ளன.  பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்திய விஞ்ஞானிகள், ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு தொடர்பாக பொது மக்கள், குறிப்பாக, கூடங்குளம், இடிந்தகரை, உவரி, கூட்டப்புளி, கூடுதாழை, பெருமணல், கூத்தங்குழி உள்ளிட்ட அந்தப் பகுதி கடற்கரை கிராமங்களில் யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். திட்டங்களுக்காக மக்கள் என்று இல்லாமல், மக்களுக்காகவே திட்டம் என்ற அடிப்படையில் செயல்பட்டு வரும் எனது தலைமையிலான அரசு, ஏழை, எளியவர்களுக்கான அரசு; சராசரி மனிதர்களுக்கான அரசு; சாமானிய மக்களுக்கான அரசு.  தமிழக மக்கள் எவரும் பாதிக்கப்படாத வகையில் தான், எனது அரசு செயல்பட்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.  எனவே, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து யாரும் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.  கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது தான் என்பதை கருத்தில் கொண்டு, உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அப்பகுதி மக்களை அன்புடன் கேட்டுக் கொள்வதோடு, கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில்  கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: