முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாவ நிவர்த்தி தரும் நவராத்திரி வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

பூவுளகை காத்தருளும் எல்லாம் வல்ல ஈசனுக்கு ஒரு ராத்திரி, அதுவே சிவராத்திரி. ஆனால் பரப்பிரம்மமான சக்திக்கு 9 ராத்திரிகள். அதுவே நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பூஜைகளை பகல் நேரத்தில் மேற்கொள்வது வழக்கம். ஆனால் சிவராத்திரி, நவராத்திரி நாட்களில் மட்டுமே மாலையிலும், இரவிலும் பூஜைகள் செய்யப்படுகிறது. புரட்டாசி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாட்களே சாரதா நவராத்திரி அல்லது மகா நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை தலா 3 நாட்களாக பிரித்து மக்கள் வழிபடுகின்றனர். பிரப்பிரும்மம் ஒன்றே என்றாலும் உலக மக்களுக்காக நன்மை செய்திடும் பொருட்டு துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று ரூபங்களில் அம்பிகையானவள் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார். முதல் மூன்று நாட்கள் துர்க்கா சக்தி ரூபமாகவும், 2 வது, 3 வது நாட்களில் லட்சுமி வடிவாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி ரூபமாகவும் அம்பாளை சித்தரித்து மக்கள் வழிபடுகின்றனர். துர்க்கா தேவி துன்பங்களை போக்குபவள். லட்சுமி பொருளாதார நெருக்கடிகளை தீர்த்து வைக்கக் கூடியவள். நல்லறிவு இருந்தால்தான் பூரண ஆனந்தத்தை அடைய முடியும் என்பதால் அந்த அறிவை வேண்டி நவராத்திரி விழாவின் நிறைவாக 3 நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம்.
9 நாட்கள் நிறைவடைந்து 10 வது நாளான விஜயதசமியன்று அம்பிகையானவள் ஆக்ரோஷத்துடன் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதையே இந்த 10 நாட்களின் விரதம் மற்றும் பூஜை குறிப்பிடுகிறது. அம்பிகையின் விக்ரக ரூபத்திலோ அல்லது படங்களிலோ பிரதிஷ்டை செய்து முறைப்படி பூஜை செய்திடலாம். 9 நாட்களிலும் தேவி பகவதி பாராயணம் செய்யலாம். சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் இல்லத்திற்கு வரவழைத்து அவர்களை தேவியராக கருதி தாம்பூலம், பழங்கள், வஸ்திரங்கள், வீட்டு உபயோகத்திறஅகு தேவையான பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப அளித்து மகிழ வேண்டும். இந்த நாட்களில் கொண்டை கடலை, கடலை பருப்பு உள்ளிட்ட பல்வேறு பயறு வகைகளுடன் விதவிதமான நைவேத்தியங்களை நாளுக்கு ஒன்றாக படைத்து வழிபட வேண்டும். பராசக்தியின் பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாடி அன்னையை ஆராதிப்பது சிறப்பும் மேன்மையையும் தரும். பெண்கள், சிறுவர், சிறுமிகள் கோலாட்டம், கும்மியடித்து நடனமாடுதல் போன்றவை நவராத்திரி பண்டிகைக்கு உரிய சிறப்புகளாகும். இது தவிர உலகை காத்து ரட்சிக்கும் ஜகன்மாதாவுக்கு பக்தர்கள் செய்யும் பூஜையாகவும் நவராத்திரி விழா அமைகிறது.
அன்னையை நவராத்திரி காலத்தில் ஸ்ரீராமன் பூஜை செய்ததாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நவராத்திரியின் போது கொலு வைத்து வழிபடுவதோடு ஆண்டு முழுவதும் அம்பிகையை நம் இதயங்களில் நிரந்தரமாக வைத்து வழிபட வேண்டும். அம்பிகையை சக்தி சொரூபியாக நினைத்து தியானிப்பதால் நமது சகல பாவங்களும் நிவர்த்தியாகி விடும் என்பது நிஜம். இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி விழா வரும் 28 ம் தேதி ஆரம்பமாகிறது.
நவராத்திரி கொலு அமைக்கும் முறைகள்:
மனிதனின் உடல் வலிமை, பராக்கிரமம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம், தேவைகளுக்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால்தான் மனிதன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் முப்பெரும் தேவியரான மலைமகள்(துர்க்கை), அலைமகள்(மகாலட்சுமி), கலைமகள்(சரஸ்வதி) ஆகியோருக்கு மூன்று நாட்களாக வழிபடும் முறையும், ஒன்பது நாட்களாக ஒன்பது சக்தியினரை வழிபடும் முறையும் உள்ளது. இதில் ஒன்பது தேவியரின் வழிபாட்டு முறையான
நவராத்திரி கொலு:
நவராத்திரியின் சிறப்பு அம்சமே கொலு வைப்பதாகும். பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதாகும். இதில் கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
1. முதலாம்படி:
முதலாம்படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற ஓரறிவு தாவர வர்க்கங்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
2. இரண்டாம்படி:
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு பொம்மைகள் வைக்க வேண்டும்.
3. மூன்றாம்படி:
மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
4. நான்காம்படி:
நாலாம்படியில் நான்கறிவு உயிர்களான நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
5. ஐந்தாம்படி:
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
6. ஆறாம்படி:
ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
7. ஏழாம்படி:
மனித நிலையில் இருந்து உயர் நிலையடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் போன்றோரின் பொம்மைகள் வைத்திட வேண்டும்.
8. எட்டாம்படி:
எட்டாம்படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.
9. ஒன்பதாம்படி:
ஒன்பதாம்படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தியை வைக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காக இப்படி கொலு அமைத்திடுவது வழக்கமாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்