முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சன் பிக்சர்ஸ் அய்யப்பன் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

திண்டுக்கல், செப்.20 - திண்டுக்கல் அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக எழுந்த புகாரில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சன் பிக்சர்ஸ் அய்யப்பனை போலீசார் மீண்டும் கைது செய்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். உடுமலைப்பேட்டை காந்தி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி புதுக்கோட்டையில் 165 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் விவசாயம் மற்றும் குதிரைப்பண்ணை நடத்தி வந்தார். சன் பிக்சர்ஸ் நிர்வாக அதிகாரி சக்சேனாவின் கூட்டாளி அய்யப்பன்(45). இவர் சீனிவாசனிடம் தன்னை சினிமா வினியோகஸ்தர் என அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் தன்னை அவரது தொழிலில் பார்ட்னர் ஆக சேர்க்க வேண்டுமென கூறியுள்ளார். அதற்கு சீனிவாசன் மறுக்கவே, தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்து போன சீனிவாசன் தனது 165 ஏக்கர் நிலத்தை உறவினர்கள் மூவருக்கு பவர் எழுதிக் கொடுத்துள்ளார். 

இதன் விபரம் அய்யப்பனுக்கு தெரியவரவே அவர் மற்றும் கார்மேகம், முத்துக்குமார், சரவணன், சபரிமுத்து, செல்லமுத்து, குப்புசாமி, நடராஜ், வேலுச்சாமி, சம்பத்குமார்(37), பழனிச்சாமி(40) ஆகியோர் சேர்ந்து மூவரையும் மிரட்டி அய்யப்பனுடைய கூட்டாளி குணசீலனுக்கு பவர் எழுதிக் கொண்டனர். இந்த சொத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும்.

இதுகுறித்து சீனிவாசன் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அய்யப்பன் உட்பட 13 பேர்கள் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 6ம் தேதியன்று சம்பத்குமாரையும், பழனிச்சாமியையும் கைது செய்தனர். வேறொரு வழக்கில் அய்யப்பன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் அவரை சிறையில் கைது செய்து திண்டுக்கல் ஜே.எம்.2 கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் லதா அவரை 15 நாள் சிறைக்காவலில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் அய்யப்பனை போலீஸ் காவலில் விசாரிக்க மனுதாக்கல் செய்தனர். அம்மனு இன்று (20ம் தேதி)  செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்