முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,செப்.22 - திருப்பரங்குன்றத்தில் நாளை மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடைபெறுகிறது. அதனால் கோயிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் உள்ள தங்க வேலுக்கு நாளை மட்டும் அபிஷேகம் நடைபெறாது. முருகப்பெருமானின் முதற்படை வீடு எனும் சிறப்புப்பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா ஆகும். திருவிழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் கிராமத்தினர் சார்பில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அத்திருவிழா நாளை நடக்கிறது. கோயிலில் மூலவர் முருகப் பெருமான் மலையின் அடிவார பாறையில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளார். இதனால் பக்தர்கள் கொண்டுவரும் பால் உட்பட அனைத்து அபிஷேகங்களும் முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கே நடக்கிறது. 

நக்கீரருக்கு சாபவிமோசனம் கொடுப்பதற்காக முருகப்பெருமான் தனது திருக்கரத்தில் உள்ள வேல் கொண்டு மலை மேல் உள்ள பாறையில் கீறி , கங்கைக்கு நிகரான புனித தீர்த்தத்தை உண்டாக்கிய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையிலும் மழை வேண்டியும் நெடுங் காலமாக ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் இந்த திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. 

திருவிழாவை முன்னிட்டு நாளை காலை மூலவர் திருக்கரத்தில் உள்ள  தங்க வேலுக்கு அபிஷேகங்கள் முடிந்து மாலை, பட்டு சாத்துபடியாகி பல்லக்கில் எழுந்தருளச்செய்து, மலை மேல் கொண்டு செல்லப்படும். அங்குள்ள அருள் மிகு காசி விசுவநாதர் கோயில் முன்பு ,சுனையில் உள்ள்  என்றும் வற்றாத தீர்த்தத்தில் 16 வகை திரவிய அபிஷேகங்கள், தீபாராதனை முடிந்து அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் சாத்துபடி செய்யப்படும். அதனைத் தொடர்ந்து அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, சுப்பிரமணியசுவாமி நக்கீரருக்கு பூஜைகள் மகாதூபதீபாராதனைகள் நடைபெறும். கிராமத்தினர் சார்பில் 105 படியில் தயாரிக்கப்பட்ட கதம்பசாதம் சுவாமிகள் முன்பு படைக்கப்பட்டு  பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். பின்னர் மலை மேலிருந்து வேல், மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவர் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு சுவாமிகள் திருக்கரத்தில் சாத்துபடி செய்யப்படும். வேலுக்கும் அருள்மிகு பழனியாண்டவருக்கும் அபிஷேக ஆராதனைகள் முடிந்து பூப்பல்லக்கில் வேல் புறபாடாகி திருவீதியுலா சென்று மூலவர் திருக்கரங்களில் மீண்டும் சமர்ப்பிக்கப்படும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்