முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி: திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உடனே நிறைவேற்றக் கோரி உண்ணாவிரத போராட்டம் இன்று நடந்தது. திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அதில் பல காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்த உண்ணாவிரத போராட்டத்தை எதிர்த்து போட்டி விடுதலை சிறுத்தை கட்சி, புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினர் சார்பில் போட்டி உண்ணாவிரதம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் இவர்களது உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுத்து விட்டனர். ஆனாலும் விடுதலை சிறுத்தை கட்சி, புதிய தமிழகம், பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க சத்திரம் பஸ் நிலையப் பகுதிக்கு திரண்டு வந்தனர்.

 

காமராஜர் சிலையை அருகே அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விடுதலை சிறுத்தை, புதிய தமிழகம், பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந் நிலையில் அவர்கள் திடீரென நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கைதானவர்களை போலீஸார் 2 வேன்களில் ஏற்றிச் சென்றனர். அந்த வேன்கள் காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்த பகுதி வழியாக சென்றபோது முதல் வேனில் இருந்தவர்கள், காங்கிரஸ் கட்சியினரை பார்த்து கோஷமிட்டனர். இதையடுத்து காங்கிரசார் 2வதாக வந்த போலீஸ் வேன் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் போலீஸ் வேனின் கண்ணாடி சேதமடைந்தது. அப்போது அந்த வேன் அந்த இடத்தில் நிறுத்தப்படவே, வேனில் இருந்தவர்கள் காங்கிரஸார் மீது செருப்பு வீசினர்.

 

பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் கற்கள், செருப்புகளை வீசினர். இதில் வேனுக்குள் இருந்த இருவர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் வேனை அவசரமாகக் கிளப்பிக் கொண்டு சென்றனர். 

இந்த சம்பவத்தால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்