முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கண்டு கொள்ளாததால் தி.மு.க. ஏமாற்றம் ​டி.ஆர்.பாலு பேட்டி

திங்கட்கிழமை, 7 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.- 7 - கூட்டணி பிரச்சினையில் காங்கிரஸ் கண்டு கொள்ளாததால் தி.மு.க.வினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கூட்டணி குறித்து காங்கிரஸ் தரப்பில் யாரும் பேச வரவில்லை என்று டி.ஆர்.பாலு விரக்தியுடன் கூறினார். காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாகவே பா.ம.க.வுக்கு 31 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 இடங்களை ஒதுக்கியது. கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்த ஒதுக்கீட்டு கணக்கின்படி காங்கிரசுக்கு 51 இடங்களே ஒதுக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோரை கொண்ட ஐவர் குழுவினர் சட்டப்பேரவை தேர்தலில் 90 தொகுதிகள் வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைத்தனர். 

ஆனால் தி.மு.க. தரப்பில் கடந்த முறை 48 தொகுதிகளில் போட்டியிட்டீர்கள். தற்போது 51 தொகுதிகள் தருகிறோம் என்று கூறினர். பின்னர் இந்த எண்ணிக்கை 53 ஆகி பின்னர் 55 ஆகி, 58-ல் வந்து நின்றது. இரு முறை இந்த குழு பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி பங்கீடு முடியாததால் காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்து கருணாநிதியிடம் பேசி விட்டு சென்றார். அப்போது 60 தொகுதிகள் என்று முடிவாகியது. அதன் பிறகும் காங்கிரஸ்- தி.மு.க. உடன்பாட்டில் சிக்கல் நீடித்தது. (இந்நிலையில்தான் காங்கிரசை அலட்சியப்படுத்திவிட்டு கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கியது. இது காங்கிரசை மேலும் கோபமடைய செய்தது.) இதனால் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த காங்கிரஸ் தரப்பினர் பின்னர் டெல்லியிலிருந்து 60 சீட்டை 63 ஆக்க வேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்தனர் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியே 4-ந் தேதி இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் விரக்தியுடன் தெரிவித்தார்.  

மேலும் காங்கிரஸ் குறிப்பிடும் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தி.மு.க. தரப்பில் அதன் தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இதுகுறித்து முடிவு எடுக்க தி.மு.க. உயர்நிலை மட்ட குழு கூட்டத்தை சென்னையில் 5-ந்தேதி கூட்டினர். அதில் மத்திய அரசிடமிருந்து தி.மு.க. மந்திரிகள் விலகுவதாகவும், வெளியிலிருந்து பிரச்சினையின் அடிப்படையில் ஆதரவு அளிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று தி.மு.க. தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் மேலிடத்திலிருந்து எந்த தகவலும் தி.மு.க.விற்கு வரவில்லை. அதோடு தி.மு.க.வின் இந்த மிரட்டலை காங்கிரசார் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று தி.மு.க. அலுவலகத்திற்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னணி தலைவர்களும் வந்திருந்தனர். அவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். 

பின்னர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. மத்திய அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை நாளை (இன்று) பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் அளிப்பார்கள். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதுகுறித்து டெல்லியில் இருந்தும் இது வரை யாரும் பேச வரவில்லை என்றார். 

நேற்று காலை தி.மு.க. தேர்தல் குழுவினருடன் பா.ம.க. தலைவர் கோ.க.மணி தலைமையில் கட்சியின் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பா.ம.க. தி.மு.க. அணியில் சேர்ந்து போட்டியிடும் 31 தொகுதிகளின் பட்டியலை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரிடம் வழங்கினார்கள். பேச்சுவார்த்தை முடிந்த பின் வெளியே வந்த பா.ம.க. தலைவர் கோ.க.மணி கூறுகையில், காங்கிரஸ் அல்லாமல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார். 

முன்னதாக தி.மு.க. அலுவலகத்திற்கு வந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் சால்வை அணிவித்து  வாழ்த்துக் கூறினார்கள். அறிவாலயத்தில் கூடியிருந்த தி.மு.க.வினர் காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்தி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். தி.மு.க. காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று தி.மு.க. தொண்டர்கள் தொடர்நது கோஷமிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்