முக்கிய செய்திகள்

தே.மு.தி.க.வின் 7வது ஆண்டு பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.23-  தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கோவையில் நடைபெறுவதாக அறிவித்திருந்த தே.மு.தி.க. வின் 7வது ஆண்டு துவக்க நாள் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது 7வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் கோவை மாநகரில் வரும் 25.09.2011 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். இருப்பினும் இதற்கிடையில் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் (21.09.2011) அறிவிப்பு செய்துள்ளது. ஆகவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்தச் சூழ்நிலையில்  தே.மு.க.கழகத்தினுடைய 7ஆம் ஆண்டு துவக்க விழாவினை சிறப்பாக நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே வேறு வழியின்றி இவ்விழாவினை தள்ளி வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்த பிறகு நமக்கு வசதியான நேரத்தில் இந்த மாபெரும் விழா சிறப்பாக நடைபெறும் என்பதையும், அதற்கான அறிவிப்பை பின்னர் வெளியிடுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எவ்வளவோ இக்கட்டான சூழ்நிலையில் இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த கழகத் தோழர்கள் இரவும், பகலும் பாடுபட்டனர் என்பதை நான் நன்கு அறிவேன். அவர்களுடைய உழைப்பையும், தியாகத்தையும் மதிக்கக் கூடியவன் என்ற முறையில் இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதை மனதார ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: