Idhayam Matrimony

ராஜினாமா பற்றி ப.சிதம்பரம் தான் முடிவெடுக்க வேண்டும்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை, செப்.23 - 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால் ராஜினாமா பற்றி அவர் முடிவெடுக்க வேண்டும் என்று கருணாநிதி கூறினார்.  சென்னையில் தி.மு.க. வேட்பாளர் முதல் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதாவது:-

கேள்வி: புரட்சி பாரதம் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ளதா? 

பதில்: தி.மு.க. தனித்து நிற்கிறது. 

கேள்வி: 3 மேயர் வேட்பாளர் பெயர் அறிவிக்கவில்லையே? 

பதில்: பிறகு அறிவிக்கப்படும். 

கேள்வி: தனித்து போட்டியிடுகிறீர்களே, வெற்றி வாய்ப்பு இருக்குமா?

பதில்: வெற்றி வாய்பு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனித்து நிற்கிறோம். 

கேள்வி: எதை வலியுறுத்தி உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்கள்? 

பதில்: உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகள், மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதை முக்கிய குறிக்கோளாக எடுத்து பிரச்சாரம் செய்வோம். 

கேள்வி: தனித்துப் போட்டி எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்படுமா? 

பதில்: அதிகாரப்பூர்வமான கூட்டணியாக இல்லாவிட்டாலும், அந்தந்த வாய்ப்புகளுக்காக ஏற்றவாறு பொது அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ளப்படும். 

கேள்வி: காங்கிரசுக்கும் இது பொருந்துமா? 

பதில்: எல்லோருக்கும் இது பொருந்தும். 

கேள்வி: சில காங்கிரஸ் தலைவர்கள் தி.மு.க. கூட்டணியில் இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்களே? 

பதில்: மகிழ்ச்சி இருபக்கமும் இருக்கின்றது. 

கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு முக்கிய பங்கு உள்ளது என்று  ஜெயலலிதா கூறி உள்ளார். இதனால் சிதம்பரம் ராஜினாமா பற்றி? 

பதில்: இப்போது அது விவாத பொருளில்லை. 

கேள்வி: உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்படுமா? 

பதில்: நடத்தப்படும் என்று ஆணையர் சோ.அய்யர் கூறி உள்ளாரே. 

கேள்வி: ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால் ராஜினாமா செய்ய வலியுறுத்துவீர்களா? 

பதில்: ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால், அது உண்மையாக இருந்தால் ராஜினாமா அவர் செய்ய வேண்டிய முடிவு. 

கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா மட்டும் முடிவெடுக்கவில்லை என்று கூறினீர்களே? 

பதில்: நான் அவ்வாறு கூறவில்லை. 

கேள்வி: 2ஜி விவகாரத்தில் அனைத்து முடிவுகளும் ப.சிதம்பரத்திற்கும், பிரதமருக்கும் தெரியும் என்று ராசா கூறியுள்ளாரே? 

பதில்: ஒவ்வொரு முறையும் 2ஜி ஒப்பந்தம் போடப்படும்போதும் முடிவுகளை கலந்தாலோசித்துவிட்டே எடுத்தோம் என்ற எண்ணத்தில் ராசா கூறியிருக்கலாம். 

இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார். 

பேட்டிக்கு பின் 7 மாநகராட்சி வேட்பாளர்கள் மற்றும் 86 நகராட்சி தலைவர்களுக்கான முதல் பட்டியலை வெளியிட்டார். அதில் சென்னை மாநகராட்சிக்கு மீண்டும் மா.சுப்பிரமணியம் வேட்பாளராகவும், வேலூர்- ராஜேஸ்வரி, ஈரோடு- செல்லபொன்னி மனோகரன், திருப்பூர்- செல்வராஜ், கோவை- கார்த்திக், நெல்லை- அமுதா, தூத்துக்குடி- பொன் இனிதா ஆகிய 7 பேர் பெயர் பட்டியலை அறிவித்துள்ளார். 

காலையில் முதலில் கருணாநிதி பட்டியல் வெளியிட இருந்தார். ஆனால் ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் வேட்பாளர் தேர்வில் கடும் பிரச்சினை ஏற்பட்டதால் கருணாநிதி மாலை 6 மணிக்கு பட்டியலை வெளியிட்டார். அதிலும் நெல்லை, மதுரை இழுபறி காரணமாக வேட்பாளரை அறிவிக்கவில்லை. 

காங்கிரசுடன் கூட்டணியில்லை, தனித்து நிற்கிறோம் என்று அறிவித்த கருணாநிதி இப்போது, தேவையான இடங்களில் பொது அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற புதிய கண்டுபிடிப்பை அறிவித்து காமெடி பண்ணினார். காங்கிரசுடனும் பொது அட்ஜெஸ்ட்மெண்ட் உண்டு என்று கூறியதன் மூலம் தி.மு.க.வினர் மத்தியில் இப்போது கூட்டணி உண்டா, இல்லையா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. தனித்து போட்டி உண்டு, ஆனா இல்லை என்று வடிவேல் காமெடி பாணியில் தொண்டர்கள் பேசி சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்