முக்கிய செய்திகள்

சுப்பிரமணியசுவாமி குற்றச்சாட்டு காங்கிரஸ் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.23  - 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் பிரச்சினையில் ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியசுவாமி கூறிய குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி ஏற்க அடியோடு மறுத்துவிட்டது. அதுமட்டுமின்றி சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் காங்கிரஸ் நிராகரித்துவிட்டது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பிரதிநிதி அபிஷேக் சிங்வி கூறுகையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவரது ஒருமைப்பாட்டு உணர்வையும் எங்களால் சந்தேகிக்க முடியாது. மேலும் சுப்ரீம்கோர்ட்டில் சுப்பிரமணியசுவாமி எழுப்பியுள்ள பிரச்சினை குறித்தும் பேச முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார். அரசியல் சட்ட அமைப்புகளிடையே பிளவை ஏற்படுத்த முயலுவது ஒரு விஷமத்தனமான முயற்சி. இது மிகவும் வருந்தத்தக்கதும் கூட என்றும் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. அது முடியும் வரை காத்திருக்காமல் அவசரப்பட்டு நிவாரணம் கோருவது கடுமையான ஆட்சேபத்திற்குரியது மட்டுமல்ல அர்த்தமற்றதும்கூட என்றும் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்தநிலையில் டாக்டர் சுப்பிரமணியசுவாமி, சுப்ரீம்கோர்ட்டில் நிதி அமைச்சக ஆவணம் ஒன்றை சமர்ப்பித்தார். அந்த ஆவணத்தில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை தொலைதொடர்பு அமைச்சரகம் ஏலத்திற்கு விட்டிருக்க முடியும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் பிரணாப் முகர்ஜி தலைமையிலான நிதி அமைச்சகம் கடந்த 2011 மார்ச் 25-ம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு மகஜர் அனுப்பி இருந்தது. அதில் ப.சிதம்பரமும் சிறையில் இருக்கும் ராசாவும்தான் 2 ஜி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான விலையை 2008-ல் கூட்டாக சேர்ந்து தீர்மானித்திருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில்தான் சுப்பிரமணியசுவாமியும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் முன்னிலையில் சில ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். அதில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான விலையை முடிவு செய்வதில் சிதம்பரத்தின் பங்கு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் அவர் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளன. ஆனால் அதை ஏற்க காங்கிரஸ் மறுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: