முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தடை

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.24​- உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்குகள் நிறுத்தப்படவேண்டும என்று  மாநில தேர்தல் ஆணையம் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:​ தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் 17​10​2011 மற்றும் 19​10​2011 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரால், ஊராட்சி வார்டு தேர்தல்களை நடத்துவதற்காக பள்ளி ஆசிரியர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாகவும், வாக்குப்பதிவு செய்யும் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய தேர்தல் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இத்தருணத்தில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) கூட்ட நடவடிக்கைகள் மாவட்டங்களில் நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையத்திற்கு தெரியவந்துள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுவது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுவிட்டதாலும், நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதாலும், பள்ளி ஆசிரியர்கள் இடமாற்ற கலந்தாய்வு கூட்ட நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உரிய ஆணைகள் பிறப்பிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்ட நடைமுறைகள் மற்றும் பணி மாறுதல்கள் ஆகியவை உள்ளாட்சி தேர்தல்கள் நடைமுறையில் உள்ளவரை நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்