முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் 30கி தங்கம் - 40 லட்சம் பணம் சிக்கியது

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. செப்.25-மீண்டும் வாக்காளர்களுக்குப் பண அருவி பாயத் தொடங்கியுள்ளது. திருச்சி இடைத் தேர்தலையொட்டி அங்கு நடந்த வாகனச் சோதனையில் அதிரடியாக ரூ. 10 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மேற்குத் தொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம் போல வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் கண் கொத்திப் பாம்பாய் கண்காணிக்க ஆரம்பித்துள்ளது.

 

பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு கருமண்டபம் பகுதியில் நடந்த சோதனையின்போது திண்டுக்கல்லில் இருந்து வந்த ஒரு காரை போலீஸார் மடக்கி நிறுத்தினர். அந்தக் காரில் பறக்கும்படையினர் சோதனை போட்டனர்.அப்போது 3 பைகள் நிறைய கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்ட்டது. அது போல தங்க நகைகளும் அதில் இருந்தன. ரூ. 40 லட்சம் பணம், 34 கிலோ தங்க நகைகள் இருந்தன. நகைகள் மட்டும் ஒன்பதை கோடி ரூபாய் மதிப்பாகும்.

 

இதையடுத்து காரில் இருந்த இருவரையும், காரையும் கலெக்டர் அலுவலகம் கொண்டு சென்றனர். விசாரணையில் தங்களது பெயர் ரமேஷ், ரவிச்சந்திரன் என்று இருவரும் தெரிவித்தனர். திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள பிரபல நகைக் கடை தங்களுடையது என்று அவர்கள் தெரிவித்தனர். நகைகளை விற்று விட்டு திருச்சி திரும்பிக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் கூறினர். இதையடுத்து தேர்தலின்போது ரூ. 1 லட்சத்திற்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதி இல்லையே அது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டனர். அதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை. மேலும், நகைகளுக்கான ரசீதுகள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் கேட்டபோது அதையும் அவர்கள் தரவில்லை.

 

எனவே இது வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பணம், நகைகளா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.இதையடுத்து அந்த நகை, பணத்தை அரசுக் கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். நகைக் கடை அதிபர்கள் உரிய ஆவணத்தைக் காட்டினால் நகை, பணம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இதே திருச்சி மேற்குத் தொகுதியில் ஆம்னி பஸ்சில் போட்டு ரூ. 5 கோடி பணத்தை வாக்காளர்களுக்காக கடத்தி வந்தனர். அதை தனி ஆளாக சென்று ஆர்.டி.ஓ. சங்கீதா பறிமுதல் செய்தார். இந்தப் பணம் இதுவரை யாராலும் உரிமை கொண்டாடப்படாமல் அரசு கருவூலத்தில் உள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது ரூ. 10 கோடி மதிப்பிலான பணம், நகை பிடிபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்