முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிலாரியை எஸ்.எம். கிருஷ்ணா நாளை சந்தித்து பேசுகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், செப்.25 - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாளை சந்தித்து பேச இருக்கிறார். நியூயார்க்கில் ஐ.நா. சபையின் 66 வது வருடாந்திர கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க்கில் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பலரும் நியூயார்க்கில் குவிந்துள்ளனர்.

இந்த கூட்டத்தின் புற நிகழ்ச்சிகளாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தனித்தனியே சந்தித்து பேசி வருகிறார்கள்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானிகர்ரை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார்.

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த தாக்குதலை பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள்தான் நடத்தியிருக்க வேண்டும் என்றும் அதற்கு பாகிஸ்தானில் உள்ள சில சக்திகள்தான் உதவி செய்திருக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கருதுகிறது.

எனவே ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டுள்ள பாகிஸ்தான் சக்திகளை ஒடுக்க வேண்டும் என்று ரப்பானிகரிடம் ஹிலாரி கிளிண்டன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஹிலாரி கிளிண்டனை இநதிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசுவாரா ? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மத்தாய் கூறினார்.

அதிகாரப்பூர்வமாக ஹிலாரி - கிருஷ்ணா சந்திப்பு குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றாலும் இவர்கள் இருவரும் திங்கள் கிழமை அன்று சந்தித்து பேச சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் மத்தாய் கூறினார்.

ஐ.நா.  பொதுச்சபை கூட்டத்திற்கு மன்மோகன் சிங் வருவதற்கு முன்பே அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உரை நிகழ்த்தி விட்டு நியூயார்க் நகரை விட்டு சென்று விட்டார். அதனால் இந்த ஆண்டு ஒபாமா - மன்மோகன் சிங் சந்திப்புக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்