முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பபடும்-சகாயம்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.- 26 - உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீதும், எடுப்பவர்கள் மீதும் கடு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தல்கள் 2 கட்டமாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல்கள் ஜனநாயக முறைப்படி நேர்மையாக, சுதந்திரமான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்திட மாவட்ட தேர்தல் அலுவலரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரக  உள்ளாட்சி தேர்தல்களை பொறுத்தவரை சிற்சில ஊராட்சிகளில் தலைவர் பதவிகள் முதலான இதர பதவிகள் ஏலம் விடுதல் மூலம் நிரப்பிட சில நபர்கள் முயல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

  உள்ளாட்சி தேர்தல்கள் அடித்தள ஜனநாயகத்தை உறுதி செய்திடும் நோக்கில் நடத்தப்படுவது ஆகும். இந்த நிலையில் பதவிகளை ஏலம் விடும் நடவடிக்கை ஜனநாயக நெறிமுறை கோட்பாட்டிற்கு முற்றிலும் புறம்பானதாகும். இது  துவக்க நிலையில் கிள்ளி எறியப்பட வேண்டும். உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவது பற்றிய புகார்கள் வரப்பெறும் பகுதிகளில் பணியாற்றும் வருவாய் துறை அலுவலர்கள், வளர்ச்சிதுறை அலுவலர்கள் ஏலம் நடைபெறுவது தொடர்பான கிராம கூட்டங்கள் நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும். காவல் துறைக்கு இது குறித்த விவரங்களை தெரிவித்து உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடும் ஜனநாயக புல்லுருவிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முற்பட வேண்டும்.

   ஊராட்சி மன்ற பதவிகள் ஜனநாயக நெறிமுறைகளை மீறி ஏலம் விடப்பட்டுள்ளது என்ற தகவல் அறியப்பட்டால் இதனை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தங்குடி ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடுதல் மூலமாக நிரப்பப்பட உள்ளதாக வரப்பெற்ற புகாரினை தொடர்ந்து காவல்துறைக்கு குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டிட இவ்வாறான தவறான செயல்களுக்கு உடந்தையாக இருக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

---

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்