முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில்இரவு நேரங்களில் லாரிகளைநிறுத்தி கொள்ளையிட்ட 5 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,செப்.- 27 - மதுரை மாவட்டம் உட்பட 10 இடங்களில் இரவு நேரங்களில் லாரிகளை நிறுத்தி டிரைவர்களிடம் நகை, செல்போன்கள், பணம் ஆகியவற்றை பறித்த 5 பேரை திருநகர் போலீசார் கைது செய்தனர். மதுரை அருகே கள்ளிக்குடி, மையிட்டான்பட்டி, மதுரை, விருதுநகர் நான்கு வழிச்சாலை, கள்ளிக்குடி ஊரணி அருகே ரிங்ரோடு சம்பக்குளம் பிரிவு, திருமங்கலம், விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேசனேரி விலக்கு, சிவரக்கோட்டை, மேலூர் பைபாஸ் ரோடு, ரிங் ரோடு தோட்டம், திருச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் கடந்த ஓராண்டாக லாரிகளை வழிமறித்து டிரைவர்களை தாக்கி செல்போன், பணம், நகை பறிப்பு சம்பவங்கள் சங்கிலி தொடராக நடந்து வந்தது.  இந்த கொள்ளை கும்பல் லாரிகளில் வருவோரை இரவு நேரங்களில் அந்த கும்பல் டார்ச் லைட் அடித்து லாரியை நிறுத்துவர். லாரியை டிரைவர் நிறுத்தியதும் அந்த கும்பல் லாரி டிரைவரிடம் அழகான பெண் உள்ளது என ஆசை வார்த்தை கூறி டிரைவரை மறைவான இடத்துக்கு அழைத்துச் செல்வர். அங்கு அதே கும்பலை சேர்ந்த ஒருவர் சேலை கட்டி பெண் போல் அமர்ந்திருப்பார். அவரிடம் லாரி டிரைவர் சென்றவுடன் அவரை தொடரும் அந்த கும்பல் டிரைவரை கட்டிப் போட்டு அடித்து உதைத்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் உள்ள செல்போன்கள் மற்றும் பணம், நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு விரட்டி விடுவர். இதே போன்று 10 இடங்களில் இவர்கள் கைவரிசையை காட்டி வந்தனர். இந்த மர்ம கும்பலை பிடிக்க திருநகர் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையில் திருப்பரங்குன்றம் உட்கோட்ட தனிப்படை சிறப்பு எஸ்.ஐ. பழனிச்சாமி, தலைமை காவலர்கள் முத்துபாண்டி, காளிராஜ், மோகன், பவளகாந்தன், செந்தில், மலையன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திருநகர் அருகே நான்கு வழிச்சாலையில் தனிப்படையினர் ரோந்து சென்றனர். அப்போது நான்கு பைக்குகளில் வந்த 5 பேரிடம் தனிப்படையினர் விசாரித்தனர். அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை திருநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா பனங்காடி, சாத்தனி பகுதியை சேர்ந்த அழகர் மகன் மலைச்சாமி(23), கண்ணுச்சாமி மகன் ஈஸ்வரன் என்ற கார்த்திக்(23), பிரபு என்ற அழகர்(23), ராஜேந்திரன் மகன் பாலமுருகன்(23), எஸ்.ஆர்.பட்டிணம் மணி மகன் லெட்சுமணன்(27) என்பதும் மேற்படி வழிப்பறி சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டதையும் ஒப்புக் கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள், 5 கைக்கெடிகாரங்கள், 5 கத்திகள், 5 டார்ச் லைட்டுகள், ரூ. 2,100 பணம் மற்றும் 4 பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் கொள்ளையிட்டது ரூ. இரண்டு லட்சத்திற்கு மேல் இருந்தாலும் அவர்கள் செலவழித்து விட்டதால் அவர்களிடம் இருந்து ரூ. 2,100 ஐ மட்டுமே போலீசார் பறிமுதல் செய்ய முடிந்தது. இது குறித்து ஏ.டி.எஸ்.பி. மயில்வாகனன் கூறுகையில், மதுரை மாவட்ட பகுதிகளில் வீடுகளில் திருட்டு, பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களை சில தினங்களுக்கு முன்பு கள்ளிக்குடியில் கைது செய்யப்பட்டனர். தற்போது லாரி டிரைவர்களிடம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டோர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை விரைவில் கைது செய்வோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்