முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வுடன் 3 கட்சிகள் தொகுதி கூட்டணி உடன்பாடு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.- 28 - தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் 3 கட்சிகள் உள்ளாட்சி இடங்கள் பங்கீடு உடன்பாடு செய்து கொண்டுள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. 3-வது முறையாக ஜெயலலிதா முதல்வர் பதவியை ஏற்றுள்ளார்.  சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்தார். உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தமிழக தேர்தல் தலைமை அதிகாரி அறிவித்தார். இதனையொட்டி ஊராட்சிமன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கின. தமிழகத்தில் மொத்தம் 10 மாநகராட்சிகள் உள்ளன. இதில் திருச்சி மாநகராட்சியை தவிர கோவை, திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை, சென்னை, மதுரை, ஈரோடு,சேலம், வேலூர் ஆகிய மாநகராட்சிகளுக்கு அ.தி.மு.க வேட்பாளர்களை ஜெயலலிதா முதலில் அறிவித்தார். மதுரையில் ராஜன் செல்லப்பாவும் கோவையில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமியும் அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த 9 மாநகராட்சிகளிலும் அ.தி.மு.க. சார்பாக வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. அதனையடுத்து நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள்,பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா பல கட்டங்களாக அறிவித்தார். அதனையடுத்து தி.மு.க. உள்பட இதர கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தனர். அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்யும்போது மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றன. ஆனால் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தே.மு.தி.க. ஆகியவைகள் தானாகவே விலகி தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. தி.மு.க.வுடன் எந்த கட்சியும் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. பா.ம.க. விடுதலை சிறுத்தை தனித்தனியாக போட்டியிடுகின்றன. ம.தி.மு.க.வும் தனித்து போட்டியிடுகிறது. ஆனால் அ.தி.மு.க.வுடன் 3 கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. இந்திய குடியரசு,அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ் மாநில முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளன. இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகின்ற 17.10.2011, 19.10.2011 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இடப்பங்கீடு குறித்து, அ.தி.மு.க. கட்சிக்கும், தோழமைக் கட்சியான டாக்டர் செ.கு.தமிழரசன், எம்.எல்.ஏ.வை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்திய குடியரசுக் கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போல், அ.தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சியான பி.வி.கதிரவன் தமிழ் மாநில பொதுச் செயலாளராகக் கொண்டு செயல்பட்டு வரும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு இடையேயும், எஸ்.ஷேக் தாவூத் தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சிக்கு இடையேயும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்