வெற்றியை அருளும் விஜயதசமி

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

நவராத்திரியில் ஒன்பது நாள் பூஜை முடிந்து 10 ம் நாள் பூர்வாங்க பூஜையாக வருவது விஜயதசமியாகும். நமது வாழ்க்கையை சீர்குலைத்து, நமக்கு பல வகைகளிலும் இன்னல்களை உண்டாக்கி, நம்மை துன்பத்தில் ஆழ்த்தி, துயரப்படவைப்பதும், வேதனையைக் கொடுப்பதும், அசுரர்களின் அசுர சக்தியாகும். அந்த அசுர சக்தியிடம் நாம் நம்மையும் அறியாமல் சிக்கிக்கொண்டு அவதியும் அல்லலும் அடைகிறோம்.  நாம் எத்தனையோ நல்ல காரியங்களை தொடங்கி அவை நல்லபடியாக முடிவுபெறாமல் பாதியிலேயே தடைபட்டு பல சமயங்களில் தோல்வியில் முடிந்து நமக்கு மன வருத்தத்தை தருவதாக அமைந்துவிடுவதும் உண்டு. அவ்வாறு ஏற்படும் தடையை நீக்கி, இடையூறாக இருக்கும் அந்த அசுர சக்தியை அடியோடு வீழ்த்தி அழிக்கவும், நமது காரியங்கள் வெற்றியடையவும் செய்யக்கூடிய அம்பிகையை வழிபடும் நன்நாளே விஜயதசமி திருநாள் என புராணங்கள் கூறுகின்றன. விஜய தசமியன்று நல்ல காரியங்கள் துவங்குவது ஏன்?

விஜய தசமியன்று அம்பாளை பூஜித்துவிட்டு தொடங்கும் எந்த காரியமும் தடையின்றி வெற்றியுடன் முடியும். அன்றைய தினம் ஆரம்பிக்கும் எந்த நற்காரியத்திற்கும் காலம், நேரம் பார்க்க வேண்டியதில்லை. காரணம் அன்றைய தினம் முழுவதும் அம்பிகையின் அருள்பெற்ற திருநாளாகும்.  ஆதிபராசக்தி, நவராத்திரியில் நடத்திய ஒன்பது நாள் இரவு பூஜைகளும் ஒன்றுதிரண்டு பூர்ணமடைவதால், பத்தாம் நாள் விஜயதசமியன்று அது மகா சக்திவாய்ந்த அருளாக அமையப் பெற்றது. அன்றைய தினம் அம்பிகை, பரமேஸ்வரனிடம் இருந்து தேவர்கள் மற்றும் மானிடர்கள் நல்வாழ்விற்காக தெய்வீக சக்திகளைப் பெற்றார்.இதற்காக அம்பாள் சிறப்பு பூஜைகளையும் மேற்கொண்டார். இவ்வாறு பரமேஸ்வரனிடமிருந்து மக்களுக்காக பெற்ற சக்தியை, விஜயதசமியன்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதனால் விஜயதசமியன்று அம்பாளை பூஜித்தால் சகல செல்வங்களும் கிடைப்பதும், அன்றையதினம் துவங்கும் அனைத்து காரியங்களும் மிகப்பெரும் வெற்றியை பெறுவதும் உறுதி. 

அறிவு குமார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: