முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்பாளர்களுக்கு அங்கீகார கடிதம் வழங்காததை கண்டித்து சிதம்பரத்தின் அலுவலகம் முற்றுகை

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

காரைக்குடி அக். - 1 - காங்கிரஸ் சார்பில் போட்டியிட மனுச்செய்தவர்களுக்கு அங்கீகார கடிதம் வழங்காததை கண்டித்து காரைக்குடியில் உள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பாராளுமன்றத் தொகுதி அலுவலகத்தை காங்கிரசார் நேற்று திடீரென்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தின் பாராளுமன்ற தொகுதி அலுவலகம் உள்ளது. நேற்று இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் காங்கிரசார் திடிரென்று இந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி நகராட்சி சேர்மன் மற்றும் கவுன்சிலர் சார்பில் போட்டியிடுபவர்களுக்கு சின்னம் ஒதுக்குவதற்கான கடிதம் கொடுக்கவில்லை என்றும் தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு மாற்றுக்கட்சியினருடன் கூட்டணி பேசிக்கொண்டு உண்மையான காங்கிரசார் ஓரங்கட்டப்படுவதுதாகவும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவேசமாக கூறினார். போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற தொகுதி பொதுச்செயலாளர் சார்லஸ் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் நகர அமைப்பாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இது குறித்து இளைஞர் காங்கிரஸ் பாராளுமன்ற தொகுதி பொதுச்செயலாளர் சார்லஸ் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு  கட்சி தலைமையில் இருந்து ஒவ்வொரு பகுதிக்கும் அப்சர்வர் நியமிக்கப்பட்டு இருந்தனர். சிவகங்கை தொகுதிக்கு முன்னாள் எம்பி நஜிமுதீன் நியமிக்கப்பட்டிருந்தார். அவரை பார்க்க கட்சியின் நிர்வாகிகள் அனுமதிக்கப்படுவது இல்லை. காங்கிரஸ் தனித்து போட்டி என்பதால் காரைக்குடி நகர்மன்ற கவுன்சிலர் பதவியில் போட்டியிட 200க்கும் மேற்பட்டோர் விருப்பமனு செய்திருந்தனர். ஆனால் மாவட்ட தலைவர் ராஜரத்தினம். முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் ஆகியோர் மாற்றுக்கட்சியினருடன் கூட்டணி பேசிக்கொண்டு 9 கவுன்சிலர்களுக்கு மட்டும் சின்னம் வழங்குவதற்கான படிவம் வழங்கி உள்ளனர். மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது குறித்து கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கும், மாநில தலைவர் தங்கபாலுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம். மீதமுள்ள 27 வார்டுகளிலும் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றார். ஒரு மணி நேர முற்றுகை போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் காலையில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்