முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் பிரதிநிதிகள் குழு டெல்லி புறப்பட்டு சென்றது

வெள்ளிக்கிழமை, 7 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.7 - கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். போராட்டக் குழுவினரும் அவர்களுடன் புறப்பட்டு சென்றனர். இந்த குழுவினர் பிரதமரை இன்று சந்திக்க உள்ளனர். அப்போது இந்த பிரச்சினையை தீர்க்குமாறு அவர்கள் கோரிக்கை விடுப்பார்கள். 

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரை பகுதி மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முதல்வர் ஜெயலலிதா முயற்சி மேற்கொண்டார். பிரதமருக்கு அவர் கடிதம் ஒன்றும் எழுதினார். இதையடுத்து பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர் நாராயணசாமியை மத்திய அரசின் தூதராக அனுப்பி வைத்தார். அவரும் கூடங்குளம் சென்று போராட்டக் குழுவினரை சந்தித்து பிரச்சினையை கேட்டறிந்தார். பிறகு சென்னை திரும்பி தமிழக முதல்வரை சந்தித்து பேசினார். அதன் பிறகு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்ட பேராயர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது. அங்கு சகஜ நிலையும் திரும்பியது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக குழுவினர் பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என்றும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் பேராயர்கள், முக்கியஸ்தர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்பட 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் நேற்று சென்னை வந்து தலைமை செயலாளரை சந்தித்து பிரதமரிடம் அளிக்க இருக்கும் மனு விவரங்களை காட்டி ஆலோசனை நடத்தினர். பிறகு நேற்று மாலை 6.10 மணிக்கு இந்த குழுவினர் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இன்று  பகல் 12.30 மணியளவில் பிரதமரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த வலியுறுத்தி மனு அளிக்கின்றனர். இந்த தகவலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார். ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் சென்ற குழுவில் மக்கள் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். அ.தி.மு.க எம்.பிக்கள் தம்பிதுரை, மைத்ரேயன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பா.ஜ.க துணை தலைவர் எச். ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி. ராஜா, சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகரும், எம்.எல்.ஏவுமான சரத்குமார் ஆகியோரும் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் புறப்பட்டு சென்றனர். இந்த மக்கள் பிரதிநிதிகள் குழுவினரும் போராட்ட குழுவினரும் பிரதமரை இன்று சந்தித்து கூடங்குளம் பிரச்சினை குறித்து மனு அளிக்கிறார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்