முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடங்குளம் பிரச்சனை: தமிழக குழுவினரிடம் பிரதமர் உறுதி

சனிக்கிழமை, 8 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, அக்.8 - மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், போராட்டக்குழு பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய கூட்டுக்குழு உருவாக்கப்பட்டு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை குறித்து விரிவாக ஆராயப்படும் என பிரதமர் மன்மோகன்சிங் தமிழக குழுவினரிடம் தெரிவித்தார். இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு மின் நிலையங்கள் அமைப்பதற்கு 1988 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.  

2001 ஆம் ஆண்டு இந்திய அணு மின் கழகத்தால் பணிகள் துவக்கப்பட்டு, முதல் அணு மின் நிலையத்தின் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் நிலையில் இருந்தன.  இந்த நிலையில், தங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதனையடுத்து,  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் 19.9.2011 அன்று இந்தப் பிரச்சனை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதினார்.  

அந்தக் கடிதத்தில்,  தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லி சென்று, பிரதமரை சந்தித்து, இந்தப் பிரச்சனை குறித்து ஒரு கோரிக்கை மனுவை  அளிக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார். 

மேலும், இந்தப் பிரச்சனையில் சுமூகத் தீர்வு எட்டப்படும் வரையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கை கேட்டுக் கொண்டார். அந்தக் கடிதம் கிடைக்கப்பெற்றவுடன் பிரதமர் மன்மோகன் சிங் அன்று (19.9.2011) மாலையே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சனைத் தொடர்பாக, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமியை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.   அதனை அடுத்து, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி 20.9.2011 அன்று இடிந்தகரை சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்த பின், 21.9.2011 அன்று தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதாவை சந்தித்து, தான் இடிந்தகரை சென்று வந்த விவரத்தை எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இடிந்தகரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த மக்களின் பிரதிநிதிகளும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவை 21.9.2011 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்போது, கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.  மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அந்தக் கோரிக்கையை ஏற்று 22.9.2011 அன்று தமிழக அமைச்சரவை கூட்டப்படும் என்றும், கூடங்குளம் பகுதியில் உள்ள மக்களின் அச்சங்கள் தீர்க்கப்படும் வரை அணு மின் நிலையப் பணிகளை மேற்கொண்டு தொடர வேண்டாம் என பாரதப் பிரதமரை கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.  

அதன் அடிப்படையில், 22.9.2011 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூடி, கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய அந்தப் பகுதி மக்களின் அச்சம் தீர்க்கப்படும் வரை அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு பாரதப் பிரதமரையும், மத்திய அரசையும் கேட்டுக் கொள்வதென்று அமைச்சரவை தீர்மானித்தது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.  

இதனை அடுத்து,  முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமையிலான தமிழகக் குழுவை சந்திக்க 7.10.2011 அன்று(நேற்று) 12.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேரம் ஒதுக்கி தந்தார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டது.  குழுவினருக்கான விமானப் பயணச் செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டது.

 தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழகக் குழு பிரதமரை நேற்று (7.10.2011) சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தது.  இந்தக் குழுவில் அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் மு. தம்பிதுரை எம்.பி., துணைத் தலைவர் வா. மைத்ரேயன் எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வி. தங்கபாலு, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஆர். சரவணபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா எம்.பி., அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர்​தலைவர் ஆர். சரத்குமார் எம்.எல்.ஏ., இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் வேட்டவலம் கே. மணிகண்டன் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெற்றனர்.

 பிரதமர் மன்மோகன் சிங் கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான தமிழகக் குழுவின் கருத்துக்களை கவனமுடன் கேட்டறிந்தார்.  பின்னர், நாட்டின் வளர்ச்சிக்கு மின் சக்தியின் தேவை எந்த அளவுக்கு இன்றியமையாததாக விளங்குகிறதோ, அதே அளவுக்கு மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரமும் முக்கியமானது என்று எடுத்துரைத்து, இந்தப் பிரச்சனையை ஒரே கூட்டத்தில் தீர்த்து விட முடியாது என்றும், எனவே, மத்திய அரசின் பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய ஒரு கூட்டுக் குழு உருவாக்கப்படும் என்றும், அந்தக் குழு கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்சனை குறித்து விரிவாக ஆராயும் என்றும் பிரதமர் தமிழகக் குழுவிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்