முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்பிரமணிய சுவாமி மனு மீது நாளை விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, அக்.9 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய அரசில் நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தின் பங்கு பற்றியும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்ற ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை திங்கட்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது. நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா உட்பட கிட்டத்தட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதே போல் கலைஞர் டி.விக்கு ரூ. 210 கோடி லஞ்சப் பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக அந்த டி.வியின் பங்குதாரர்களான கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்னமும் ஜாமீன் கிடைக்காததால் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகிறார்கள். 

இந்த நிலையில் பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய நிதியமைச்சகம் ஒரு குறிப்பு அனுப்பியது. அதில் ப. சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் விடப்பட்டிருக்கும். முறைகேடு நடந்திருக்காது என்று அந்த குறிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த நிதியமைச்சக குறிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பதவி விலக வேண்டும் என்று பலரும் கோரி வருகிறார்கள். ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் சிதம்பரத்திற்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் வெளியாயின. மேலும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ப. சிதம்பரமும் சந்தித்து தங்களுக்குள் இந்த பிரச்சினையை தீர்த்துக் கொண்டதாகவும் சில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. 

இந்த நிலையில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிதம்பரத்தின் பங்கு பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. ஆனால் அதற்கு முன்பாக 2 ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரத்தில் விலை நிர்ணயம் செய்தது தொடர்பான அனைத்து கோப்புகளையும் சுப்ரீம் கோர்ட் கேட்டிருப்பதாக தெரிகிறது. இந்த கோப்புகளை பார்த்த பிறகு சுப்ரீம் கோர்ட் தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்