முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாத்திரையின்போது கறுப்புப்பண பிரச்சனையை எழுப்புவேன்-அத்வானி

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அக்.- 10 - நாடு முழுவதும் தான் மேற்கொள்ள இருக்கும் ஊழலுக்கு எதிரான யாத்திரையின்போது வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய கறுப்புப் பண பிரச்சனைபற்றி தாம் எழுப்பப்போவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே சமீபத்தில் ஒரு பெரும் போராட்டமே நடத்தினார். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இந்த மசோதாவில் பிரதமர் உள்ளிட்டோரும் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரி, அன்னா ஹசாரே கிட்டத்தட்ட 13 நாட்கள் ராம்லீலா மைதானத்தில் உண்ணா விரதம் இருந்தது உலகறிந்த விஷயம். இந்தநிலையில் ஊழலுக்கு எதிரான யாத்திரை ஒன்றை பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நாளை( 11 ம் தேதி) துவக்குகிறார். நாடு முழுவதும் இந்த யாத்திரை மூலம் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு தலைநகர் டெல்லியில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் அவரது டெல்லி இல்லத்திற்கு சென்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர்கள் மத்தியில் அத்வானி பேசினார். அப்போது ஊழலுக்கு எதிரான யாத்திரையின்போது வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய கறுப்புப் பணத்தை மீட்டு கொண்டுவருவது பற்றி தாம் பிரச்சனை எழுப்பப் போவதாக அத்வானி தெரிவித்தார். ஊழல் பிரச்சனை மட்டுமல்ல, விலைவாசி உயர்வு, நாட்டில் நிலவும் கடுமையான வறுமை போன்றவற்றையும் வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் பற்றியும் தாம் பேசப்போவதாக அத்வானி தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாகவே எமது இந்தியப் பணத்தின் பெரும்பகுதி வெளிநாட்டு வங்கிகளிலும், குறிப்பாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது பற்றி தாம் பேசி வருவதாகவும் அத்வானி குறிப்பிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருக்கும்போதே இந்த பிரச்சனையை ஸ்விஸ் வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பித் தர இயலாது என்றும், தகவல்கூட தர முடியாது என்றும் கூறிவிட்டார்கள். காரணம் வங்கியின் ரகசியச் சட்டம் அப்படி கூறுகிறது என்று அவர்கள் கூறிவிட்டார்கள். நாங்களும் கேட்டுக் கேட்டு பார்த்தோம். ஆறாண்டுகாலம் பதவியில் இருந்தபோது கறுப்புப் பணம் பற்றி என்ன செய்தீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். தகவல் பெறுவதைக்கூட ஸ்விஸ் அரசு எங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை என்றும் அத்வானி கூறினார். பிறகு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நெருக்கடி கொடுத்த பிறகு ஸ்விஸ் வங்கி சட்டங்கள் மாற்றப்பட்டன. இப்போது வங்கி விபரங்களைத்  தர,  ஸ்விட்சர்லாந்து அனுமதிக்கிறது. அதனால்தான் சொல்கிறேன் கறுப்புப் பணத்தை மத்திய அரசு மீட்க வேண்டும். 2009 தேர்தலின்போதே நான் இப்பிரச்சனையை எழுப்பினேன். பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் தங்கள் பணத்தை திரும்பப் பெறுகின்றன. ஏன் இந்தியா  மட்டும் அதைப் பெறக்கூடாது? என்று நான் கேள்வி எழுப்பினேன் என்றும் அத்வானி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்