முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் முதல்வர் ஜெயலலிதாவை மறக்கவேமாட்டோம்-தாய்மார்கள் உருக்கம்

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

திருவள்ளூர், அக். - 10 - ஏழை, எளிய பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கிய முதல்வர் ஜெயலலிதா அம்மாவை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம் என்று இலவச ஆடுகளை பெற்ற தாய்மார்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர். தமிழக முதல்வராக 3 வது முறையாக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு பல்வேறு நன்மைகளை தமிழக மக்களுக்கு கருணை உள்ளத்தோடு செய்து வருகிறார். பதவியேற்ற முதல் நாளன்றே ஏழு நல்ல காரியங்களை நிறைவேற்ற அவர் கையெழுத்திட்டது தமிழக மக்கள் நன்றாக அறிந்த ஒன்று. ஏழை பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், முதியோர்களுக்கு உதவித் தொகை போன்ற பல திட்டங்களை நிறைவேற்ற முதல் நாளன்றே கையெழுத்திட்ட முதல்வர் ஜெயலலிதா அதை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். மேலும் ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி, தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி போன்றவற்றையும், மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்பையும் வழங்க உத்தரவிட்ட முதல்வர் அதை செயல்படுத்தியும் வருகிறார்.  நீலகிரி கொடைக்கானல் போன்ற மலைவாழ் மக்களுக்கு மின் விசிறிக்கு பதிலாக மின்சார அடுப்பு வழங்கவும் அவர் கருணையோடு உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமின்றி, ஏழை பயனாளிகளுக்கு கறவை மாடுகள், 4 ஆடுகள் ஆகியவற்றையும் ஜெயலலிதாவின் அரசு வழங்கி வருகிறது. சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து ஏழை பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை வழங்கினார். இதனால் வாழ்க்கையில் நம்பிக்கையிழந்து சோர்ந்து போயிருந்த ஏழை தாய்மார்கள் இப்போது நம்பிக்கையோடு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். ஆடு, மாடுகள் வழங்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டில் பால் உற்பத்தியும் பெருகும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வரும் முதல்வர் ஜெயலலிதாவை பலதரப்பட்ட மக்களும் பாராட்டுகிறார்கள். குறிப்பாக, தாய்மார்கள் அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார்கள்.  இலவச ஆடுகள் பெற்ற சில தாய்மார்கள் முதல்வரை மனமுவந்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த சிற்றம்பாக்கம் கிராமத்தில் வாழும் ஏழை தாய்மார்கள் முதல்வர் ஜெயலலிதாவை நன்றியோடு நினைத்துப் பார்த்து பாராட்டியுள்ளனர்.
எல். பிரேமா:
இந்த கிராமத்தில் வசிக்கும் எல். பிரேமா கூறுகையில், எனது கணவர் பெயர் லோகநாதன் எனது கணவர் இறந்து 5 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு பிள்ளைகள் கிடையாது. நான் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். நான் இந்த ஆடுகளை 1 மாதத்திற்கு முன் அதிகாரிகளுடன் சென்று செங்குன்றம் அருகேயுள்ள ரெட்டேரி சந்தையில் வாங்கினேன். 1 கடா ஆட்டையும், 3 பெண் ஆடுகளையும் அதிகாரிகளுடன் சென்று வாங்கினேன். இந்த 4 ஆடுகளின் மதிப்பு ரூ.10 ஆயிரம், ஆடுகளை பாதுகாக்க வீட்டின் அருகே கொட்டகை போடுவதற்கு ரூ.2 ஆயிரம் கொடுத்தார்கள் அதிகாரிகள் என்றும் அவர் கூறினார். முதல்வர் ஜெயலலிதா என்றும் எங்களுக்கு துணையாக இருப்பார்கள், அவரது கையால் ஆடுகளை வாங்கியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்களால் கடைசி வரை ஜெயலலிதாவை மறக்க முடியாது என்றும் நா தழுதழுக்க கூறினார் பிரேமா.
பயனாளி யசோதா (50):
இவர் சிற்றம்பாக்கம் கிராமத்தில் வசிக்கிறார் இவர் வாய் பேசமுடியாத ஊமை. ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர். இவருக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். குடிசை வீட்டில் வசிக்கிறார். இவர் கூலி வேலை செய்கிறார். இவருக்கு தமிழக முதல்வர் 4 ஆடுகள் கொடுத்துள்ளார் என்பதை சைகை மூலம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என்று உணர்ச்சிப் பெருக்கால் கண்கலங்கினார்.
பயனாளி முனியம்மாள் (62):
இவரது கணவர் பெயர் துரை . 20 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். முனியம்மாளுக்கு 4  ஆண் பிள்ளைகளும், 1 பெண் பிள்ளையும் உள்ளது. இவர் தனக்கு ஆடுகள் வழங்கப்பட்டது பற்றி கூறுகையில், பிழைப்புக்காக, வழி இல்லாத எங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா 4 ஆடுகள் வழங்கி உள்ளார். இந்த காலத்தில் பிள்ளைகளே பெற்றோர்களை கவனிப்பது கிடையாது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா தாய் உள்ளத்தோடு ஏழை, எளிய மக்களுக்கு இது போன்ற உதவிகள் செய்து வருகிறார் என்று கூறிய அவர், முதல்வர் ஜெயலலிதாவை நான் படுக்கும் போது கூட கடவுள் போல் நினைத்துக் கொண்டு படுக்கிறேன் என்று உணர்ச்சி மல்க கூறினார்.
பயனாளி பச்சையம்மாள் (36) :
நான் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர். எனது கணவர் பெயர் சம்பத். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனக்கு ஒரு ஆண் பிள்ளை உள்ளார். அவர் பெயர் ரமேஷ். முதல்வர் ஜெயலலிதா 4 ஆடுகளை எனக்கு கொடுத்துள்ளார். 1 மாதத்திற்கு முன் ஆடுகளை செங்குன்றம் அருகேயுள்ள ரெட்டேரி ஆட்டு சந்தையில் வாங்கினேன். இந்த ஆடுகள் 6 முதல் 9 மாதத்திற்குள் வளர்ந்து விடும் 2 ஆண்டுகள் வரை அவற்றை காப்பாற்றி விட்டால் ஆடுகள் பெருகிவிடும். பிறகு எங்களுக்கு கவலை இல்லை என்றும், ஒவ்வொரு சனிக்கிழமையன்று ஆடுகளை கால்நடை மருத்துவர் சோதனை செய்து வருகிறார் என்றும் கூறியதோடு எங்களை வாழ வைத்து பார்க்கும் அன்பு தெய்வம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என்று தெரிவித்தார்.
பயனாளி துரையம்மாள் (57):
என் கணவர் பெயர் தசரதன். அவர் 10 ஆண்டுகளுக்கு முன் காலமானார். எனக்கு 2 ஆண் பிள்ளைகள், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். நான் அனைவருக்கும் திருமணம் செய்து விட்டேன். நான் கூலி வேலை செய்து வருகிறேன். தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த கிராமப்புற ஏழை, எளியோருக்கு ஆடு வழங்கும் திட்டம் மகத்தான திட்டம். அ.தி.மு.க ஆட்சி வந்த சில மாதங்களில் எங்களுக்கு 4 ஆடுகள் வழங்கியது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றும் எங்கள் வாழ்க்கை இனி மகிழ்ச்சியுடன் இருக்கும் என்றும் நன்றி பெருக்குடன் கூறினார்.
பயனாளி சுலோச்சனா (50):
என் கணவர் பெயர் ரத்தினம். அவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். எனக்கு 1 பெண், 1 ஆண் பிள்ளைகள் உள்ளனர். என் மகன் சுரேஷீக்கு வலது கால் உடைந்துள்ளது. மகள் அம்மு 8 ஆம் வகுப்பு படிக்கிறாள். நான் மிகவும் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். இந்நிலையில் தமிழக முதல்வர் ஏழை எளியவர்களுக்கு கிராமப்புறங்களில் வாழும் பயனாளிகளுக்கு 4 ஆடுகள் வழங்கியது சந்தோஷமாக உள்ளது. முதல்வர் ஜெயலலிதா பேர் சொல்லும் படி நலத்திட்டங்களை செய்து வருகிறார். சாகும் வரை நான் அவரை மறக்க மாட்டேன். நன்றியுடன் அவருக்கு இருப்பேன், இதுநாள் வரை நான் நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையில் இருந்தேன், கவலையாக இருந்தது. இப்போது முதல்வர் ஜெயலலிதா இலவசமாக 4 ஆடுகள் கொடுத்தது பெருமையாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது என்று கூறினார்.
பயனாளி முடியலா(48):
என் கணவர் பெயர் மூர்த்தி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காலமானார். 1பெண் உள்ளார். அவள் பெயர் சரிதா. அவளுக்கு திருமணம் முடிந்து விட்டது. நான் கூலி வேலை செய்து வயிற்றுபிழைப்பு நடத்தி வருகிறேன், எனது பிழைப்புக்காக 4ஆடுகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா கொடுத்துள்ளார். அதை வைத்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுவேன், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் முதல்வரை மறக்கவே மாட்டேன். அம்மாவை நேரில் காணமுடியாத நிலையில் இருந்தேன். ஆனால் அம்மாவை திருவள்ளூரில் நடைபெற்ற விழாவில் நேரடியாக சந்தித்து அவரிடம் இருந்து 4 ஆடுகள் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று நன்றி உணர்ச்சியோடு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
வாரத்தில் ஒருநாள் சனிக்கிழமையன்று கால்நடைத்துறை மருத்துவர்கள் ஆடுகளை பார்த்துவிட்டு செல்கின்றனர். ஏதாவது குறைகள் இருந்தால், ஆடுகளுக்கு நோய் ஏற்பட்டால் உடனடியாக சொல்லுங்கள் மாத்திரை, மருந்துகள் தருகிறேன் என கேட்டு விட்டு செல்கிறார்கள் மருத்துவர்கள். திக்கில்லாத எங்களுக்கு அம்மாதான் எங்களுக்கு குல தெய்வம் என்றும் நாங்கள் இப்போது நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
ஆக, இலவச ஆடுகளை பெற்ற தாய்மார்கள் தங்கள் வாழ்க்கையில் இப்போது நம்பிக்கையோடு வீரநடை போட்டு வருகிறார்கள் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்