முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவுஅருகே துப்பாக்கி சூடு நடத்தி இலங்கை கடற்படை அட்டூழியம் தமிழகமீனவர்கள் விரட்டியடிப்பு

திங்கட்கிழமை, 10 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மண்டபம், அக்.- 10 - கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன் பிடித்துக்கொண்டிருந்த மண்டபம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு மிரட்டி விரட்டியடித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு, கோயில்வாடி கடற்பகுதியில் இருந்து நேற்றுகாலை 300 க்கும் அதிகமான விசைப் படகுகள் டோக்கன் பெற்று மீன்பிடிக்கச் சென்றன. நள்ளிரவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அப்பகுதிக்கு வந்தனர். துப்பாக்கியால் கடல் தண்ணீரில் சுட்டு மிரட்டல் விடுத்தனர். மண்டபத்தைச் சேர்ந்த ராஜு, ஜெயராஜ் உட்பட 10 க்கும் அதிகமானோரின் விசைப்படகுகளில் இலங்கை கடற்படையினர் அத்துமீறி ஏறினர். இறால், நண்டு, கணவா உள்ளிட்ட மீன்களை அள்ளி கடலுக்குள் வீசினர். அரிவாளால் வலைகளை அறுத்து எறிந்தனர். சி.பி.எஸ். கருவிகள், மொபைல் போன்களை பறித்து தண்ணீருக்குள் வீசினர். படகு பலகைகளை அறிவாளால் வெட்டி சேதப்படுத்தி மீன்பிடிக்க இப்பகுதிக்கு வரக்கூடாது என எச்சரித்தனர். உயிர் பிழைத்தால் போதும் என்று எண்ணிய தமிழக மீனவர்கள் நேற்றுகாலை கரை திரும்பினர். 

இதுகுறித்து மீனவர் தில்லைமுத்து கூறுகையில், நள்ளிரவு பதினொன்றரை மணியளவில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் கடல் தண்ணீரில் சுட்டவாறு விசைப் படகுகளை விரட்டி வந்தனர். எதுவும் செய்துவிடாதீர்கள் என்று உயிர்ப்பிச்சை கேட்டோம். இரக்கமற்ற அவர்கள் அத்துமீறி எங்கள் படகுகளில் ஏறி, மீன்களைப் பறித்தும், வலைகளை அறுத்தும், தகவல் தொடர்பு சாதனங்களை பறித்து கடலில் வீசியும் அட்டூழியம் செய்தனர் என்றார். இந்திய வெளியுறவு துறை செயலர் இலங்கை சென்றுள்ள நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி மிரட்டி விரட்டி இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று மீனவர் சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்